கர்நாடகா மாநிலத்தில் செய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் வந்தது. மேட்டூரும் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், திருச்சி முக்கொம்பில் ஒரு லட்சம் கன அடி நீர் பெருக்கெடுப்பதால், முக்கொம்பு மேலணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உபரி நீரானது திருச்சி மாவட்டம், முக்கொம்பு வந்தடைந்தது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுமையாக உபரிநீர் திறந்து விடப்பட்ட உள்ளது என திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதனால் காவிரி, கொள்ளிட கரையோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மேட்டுப்பாங்கான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் சார்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் / வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கிராமங்களில் தங்கியிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ, செல்பி எடுக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ ‘செல்பி’ (Selfie) எடுக்க கூடாது.
நீர்நிலைகளில் இறங்கா வண்ணம் கவனமாக குழந்தைகளை பார்த்துக்கொள்ளவேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பாலங்கள் தவிர, பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒரு அணியும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஒரு அணியும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்