கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் செயல்பட்ட எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்றது என்ற புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் ஆலோசனையின் கீழ் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வந்த சிவகுருநாதன் (வயது 55) மற்றும் அவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது 40) பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
.சோதனையில் மருந்து விற்பனை பிரதிநிதி மூர்த்தி, நர்சிங் மையம் நடத்தும் வீரமணி, அரசு தலைமை செவிலியர் அபியாள், மருந்தாளுனர் தங்கம் ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் சிவகுருநாதன் பி.எஸ்சி வேளாண்மை படித்த பின்னர், டெல்லியில் சித்த மருத்துவ சான்றிதழ் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சான்றிதழின் உண்மை தன்மை தனி ஆய்வில் தான் தெரியவரும் எனக் கூறப்படுகிறது .
2012 முதல் இந்த நர்சிங் பயிற்சி மையம் சட்டவிரோத கருக்கலைப்பு மையமாக இயங்கி வந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் கள்ளக்காதலில் கருவுறும் பெண்களிடமிருந்து கட்டணம் வசூலித்து 10-க்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நர்சிங் பயிற்சி மையத்தை மூடுவதற்கான பரிந்துரை மருத்துவத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.வீரமணி நடத்தும் விருத்தாசலம் மையத்திலும் இதே போன்ற செயல்கள் நடந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத கருக்கலைப்பு செய்த 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.