வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் இவரது மகன் பாரத் (வயது 36).
இவர் கேட்டரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரை சேர்ந்த நந்தினி (வயது 26) என்ற பெண்ணுடன் திருமணமாகி நான்கு மற்றும் மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் மகள்கள் சொந்த ஊரில் உள்ள நிலையில் சென்னை தாம்பரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கி ஓட்டலில் வேலை செய்து வரும் பாரத் விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் (20.07.2025) விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர். (21.07.2025) குருவராஜபாளையம் பகுதியில் உள்ள கடைக்கு தனது மனைவி, மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று தனது மகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்து விட்டு ஊருக்கு திரும்பும் போது, சாலையில் தென்னை மட்டையை போட்டு விபத்து போல் ஏற்படுத்தி அடையாளம் தெரியாத நபரால் மனைவி மற்றும் அவருடைய 3 வயது மகள் கண்முன்னே சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முதற்கட்டமாக உடன் இருந்த மனைவி நந்தினியிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பாரத் – நந்தினி வீட்டிற்கு எதிரே வசிக்கும் சஞ்சய் என்ற இளைஞரை பிடித்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் 26 வயது உடைய நந்தினிக்கும் எதிர்வீட்டைச் சேர்ந்த 21 வயது சஞ்சய் என்பவருக்கும் கடந்த ஓராண்டாக நட்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறி இருவரும் பழகி வந்ததும் இதற்கு இடையூறாக இருந்த கணவர் பாரத்தை தீர்த்து கட்ட இருவரும் திட்டமிட்டு கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை விசாரணையில் தெரிய வருகையில்:
பாரத் சென்னையில் ஹோட்டலில் வேலை செய்யும் போது ஊரில் தனியாக உள்ள நந்தினிக்கும் எதிர் வீட்டில் உள்ள சஞ்சய் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இது நந்தினியின் கணவர் பாரத்திற்கு தெரிய வர இதனை பாரத் கண்டித்துள்ளார். அதற்குப் பிறகும் நந்தினி தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த பாரத் நந்தினியை தாக்கியுள்ளார்.
இவை எல்லாவற்றையும் தனது கள்ளக்காதல் சஞ்சய் என்கிற திருமூர்த்தியிடம் நந்தினி கூறவே தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கடைக்குச் சென்று திரும்பும் போது தாங்கள் வருவது குறித்து சஞ்சய்க்கு தகவல் கொடுத்துள்ளார் நந்தினி.
இதனை அடுத்து வழியில் மறைந்திருந்த பாரத் இவர்கள் வரும் போது திடீரென பாரத்தை தாக்கி அவருடைய மூன்று வயது மகள் கண்முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
தனது கணவன் கண் முன்னேயே வெட்டுண்டு இறப்பதை பார்த்துக் கொண்டிருந்த மனைவி நந்தினி சற்றும் அசைந்து கொடுக்காமல் இரக்கமின்றி கள்நெஞ்சத்தோடு நின்று கொண்டிருந்துள்ளார்.
காவல்துறையினர் கேட்டபோதும் எனக்கு எதுவும் தெரியாது கீழே விழுந்து விட்டோம் என்றும் கூறியுள்ளார். கொலையாளி சஞ்சய் அங்கிருந்து தப்பிச்சென்று இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் சடலம் கிடந்த இடத்திற்கு வந்து கூட்டத்தோடு கூட்டமாக நின்றுள்ளார். பின்னர் காவல்துறை விசாரிப்பதை அறிந்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த மனைவி நந்தினியிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே. கொலை குறித்து காவல்துறையினர் சிறுமியிடம் கேட்டதாகவும் அப்போது சிறுமி எதிர் வீட்டை சேர்ந்த சஞ்சய் வந்ததாகவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கொலையாளி சஞ்சயை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் விசாரணைக்குப் பிறகு திட்டமிட்டு கணவரை கொலை செய்த நந்தினி அவருடைய கள்ளக்காதலன் சஞ்சய் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.