திருச்சியில்
பஞ்சர் கடைக்காரரை மதுபோதை தகராறில், கொலை செய்த பிச்சைக்காரன் உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது56), நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவர், லாரி ஓட்டுநரான அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் பஷீர் (வயது30) மற்றும் அதே பகுதியில் யாசகம் எடுத்து வந்த சேலத்தைச் சேர்ந்த ராஜா (வயது40) ஆகியோருடன் சேர்ந்து பால் பண்ணை ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு மது அருந்தியுள்ளார்.
அப்போது, மூவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அப்துல் கபூர் பஷீர், ராஜா இருவரும் சேர்ந்து சிவகுமாரை கல் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்தார்.
அப்பகுதியிலிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்துல் கபூர் பஷீர், ராஜா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.