Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும் பாரம்பரிய சிலம்பக் கலை .

0

'- Advertisement -

சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் மோதும் ஓசையைக் குறிக்கிறது.

 

சிலம்பக்கலையின் வரலாறு:

 

பழங்காலம்:

சிலம்பக்கலை, மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள கையாண்ட முறைகளில் இருந்து வளர்ந்துள்ளது,

 

 

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர், சிலம்பத்தை 64 கலைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொன்மங்கள், சிலம்பம் பற்றிய முதல் வரலாற்று ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

 

சிலம்பம், மதுரை நகரை மையமாகக் கொண்டு பரவியதாகக் கருதப்படுகிறது.

 

சிலம்பம் பயிற்சி ஏழு முதல் எட்டு வயது வரை தொடங்கப்படலாம், மேலும் 15 வயது வரை குருவின் கண்காணிப்பில் பயிற்சி நடைபெறும்,

 

சிலம்ப விளையாட்டில் பல வகைகள் உள்ளன, அவை அலங்காரச் சிலம்பம், போர் சிலம்பம், குறவஞ்சி சிலம்பம், பனையேறி மல்லு, துலுக்கானா, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு எனப் பல வகைகளாகும்.

 

அலங்காரச் சிலம்பம், பொதுவாக மன்னர் காலங்களில் திருவிழாக்கள் மற்றும் கேளிக்கைகளுக்காக விளையாடப்பட்டது.

 

சிலம்பம் பயிற்சி, ஒருவரது உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

தாக்குதல் மற்றும் தற்காப்பு உத்திகளை கற்றுத்தருவதால், சுய பாதுகாப்பிற்கு உதவுகிறது.

சிலம்பம், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

சிலம்பம் பயிற்சியை அனுபவம் வாய்ந்த ஆசிரியரிடம் பெறுவது நல்லது.

சிலம்பம் பற்றிய அகழ்வாய்வு சான்றுகள் கி.மு. 2000 க்கு முற்பட்டவை.

தமிழர் இலக்கியங்களில் சிலம்பம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

 

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர்.

இவ்வாறு பழமை பெருமை வாய்ந்த தமிழர் தற்காப்பு கலையான சிலம்ப கலையை தற்போது பலரும் ஏதாவது சிலம்ப கூடம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அது எவ்வாறு என்பதை விரிவாக பார்ப்போம் :-

 

உலகம் முழுவதிலும் சிலம்பக்கலை இன்று பரவி இருந்தாலும் . தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு விளையாட்டு இது .

 

ஆனால் தமிழகத்தில் இந்த கலையை வைத்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக உள்ளனர் பெரும்பாலானோர் .

 

உதாரணமாக ஒருவர் ஒரு சிலம்ப கூடம் நடத்தி வருகிறார் . இதில் 20-30 மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு மாதம் 6 அல்லது 7 நாட்கள் பயிற்சி அளிக்க மாதம் ஆயிரம், இரண்டாயிரம் என வசூல் செய்கிறார்கள் .( இது குறித்து திருச்சி எடத்தெருவை சேர்ந்த மூத்த ஆசான் ஒருவர் கூறுகையில் சிலம்பம் , குஸ்தி போன்ற பாரம்பரிய தற்காப்பு கலையை இலவசமாக தான் கற்று தர வேண்டும் . தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் ஒரு ரூபாய் அல்லது 11 ரூபாய் மட்டுமே குரு தட்சணையாக தந்தால் போதுமானது . தற்காப்பு கலையை அவர்களின் கை, கால்கள் விளங்காமல் போய்விடும் என எனது ஆசான் எனக்கு கூறியுள்ளார் என்று கூறினார்.)

 

மேலும் இந்த விளையாட்டு மாணவ, மாணவிகளை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அங்கு லோக்கலில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் அந்த மாணவ மாணவிகளை விளையாட செய்து அவர்கள் வழங்கியது போன்று இவர்களே சான்றிதழ், மெடல் , கோப்பைகளை அவரிடம் கொடுத்து வெற்றி பெற்றது போன்று ரயில் நிலையம் அல்லது விமான நிலையத்திற்கு அவர்களுக்கு தெரிந்த பத்திரிகையாளர்களை அழைத்து டெல்லி சென்றோம், சிங்கப்பூர் சென்றோம் அங்கு நமது குழந்தைகள் பத்து தங்கப்பதக்கம், ஐந்து வெள்ளி பதக்கம் . மூன்று வெண்கல பதக்கம் என ஒட்டுமொத்த சாம்பியன் தாங்கள்தான் எனக் கூறி பரிசு கோப்பையுடன் பேட்டி அளிப்பார்கள் . இது குறித்து போட்டியில் கலந்து கொண்டு திரும்பிய குழந்தையின் தாயார் கூறியதாவது :- சிங்கப்பூரில் உலக அளவிலான சிறப்பு போட்டி நடைபெறுகிறது உங்கள் குழந்தைக்கு விமானம் ,ஓட்டல் சாப்பாடு செலவு ரூ.50000 கட்டுங்கள் எனக் கூறியுள்ளார் . மேலும் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்றால் அந்த சான்றிதழுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு உண்டு என நம்பி நானும் எனது குழந்தையை அனுப்பி வைத்தேன் . வேறு விமானத்தில் நானும் சிங்கப்பூர் சென்றேன், எனது குழந்தையின் விளையாட்டுத் திறமையை ரசிக்க ஆனால் அங்கு நடந்ததோ வேறு . மூணு நாட்களும் ஓட்டலில் குழந்தைகளை தங்க வைத்து சாப்பாடு கொடுத்து . இந்தியா திரும்பும் போது எனது குழந்தைக்கு இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கல மெடல்களை சான்றிதழ்களுடன் அளித்து இந்தியாவிலிருந்து பல அணிகள் வந்தாலும் தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட நம் அணி தான் ஒட்டுமொத்த சாம்பியன் என பேட்டி அளித்தார் அந்த சிலம்ப கூட ஆசான். எனது குழந்தை போட்டிகளில் கலந்து கொண்டு தோல்வி அடைந்திருந்தால் கூட நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் . ஆனால் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் எனது குழந்தை வெற்றி பெற்றதாக மெடல் மற்றும் சான்றிதழ் பெற்று வந்தது எனக்கு அவமானமாக உள்ளது என வருத்தத்துடன் கூறினார் .

 

இப்படி பணம் சம்பாதிப்பது ஒரு வகை என்றால் இன்னொரு வகை ,

 

திருச்சியில் ஏதாவது ஒரு பள்ளியில் இலவசமாக இடத்தை வாங்கிக் கொண்டு தமிழக அளவிலான சிலம்பப் போட்டி என ஒரு சிலம்ப கூடத்தின் பேரில் அறிவிப்பது , இதில் பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் கட்டாயம் உண்டு . அனுமதி கட்டணம் ஆயிரம் முதல் 5000 வரை வசூலிப்பார்கள் . போக்குவரத்து செலவு தனி . வேற சிலம்ப கூட ஆசானிடம் 5000 என்றால் 2500 நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு 2500 மட்டும் தந்தால் போதும் எனக் கூறி சிலம்பாட்ட வீராங்கனை அழைத்து வருபவர்களுக்கும் கமிஷன் உண்டு. இப்படி ஒரு குழந்தைக்கு ரூ.2000 என்றால் ஆயிரம் குழந்தைக்கு இருபது லட்சம் வசூல் செய்து விடுகிறார்கள் இந்த சிலம்பக் கூடம் நிர்வாகிகள் அல்லது ஆசான்கள். இந்த சிலம்ப போட்டிகள் நடத்தும் பலருக்கு சிலம்பம் என்றால் என்னவென்று கூட தெரியாது . ( சிலம்ப கூடத்தில் பயிற்சி அளிப்பது வேறு இடத்தில் பயிற்சி பெற்று வரும் மூத்த விளையாட்டு வீரர்களை வைத்துதான் .) இருபது லட்சம் வசூலில் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு, சான்றிதழ், மெடல்கள், கோப்பைகள் செலவு அதிகபட்சம் இரண்டு லட்ச ரூபாய் ஆகும் . மீதம் குறைந்தபட்சம் 18 லட்ச ரூபாய் லாபம் பார்த்து விடுவார்கள் . வடக்கு மூன்று முறை நடத்தினால் எந்தவித வேர்வையோ சிந்தி உழைக்காமல் ரூ.54 லட்சம் லாபம் . இது மற்ற மாவட்டங்களில் சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ஒரு வீரருக்கு பத்தாயிரம் என்றால் ஆயிரம் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் என எந்தவித ஜிஎஸ்டியும் இல்லாமல் எளிதாக சம்பாதித்து வருகிறார்கள்.

 

இதற்காக அனைவரையும் இதுபோன்று குறை கூறி விட முடியாது . மதுரை சேர்ந்த வயதான ஒரு சிலம்ப ஆசான் திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்து போட்டி ஒன்றை நடத்தினார். வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மெடல்கள், கோப்பைகள் வழங்கினார் . ஆனால் யாரிடமும் பணம் எதுவும் பெறவில்லை எனக் கூறினார். எப்படி இது போன்று நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என கேட்டதற்கு உண்மையான சிலர் இதற்கு உதவினார்கள் உதாரணமாக உணவுக்கு ஒருவரும், சான்றிதழ்களுக்கு ஒருவர் , மெடல் கோப்பைகளுக்கு ஒருவர் என அனைத்திற்கும் ஸ்பான்சர் பிடித்தோம் . ஒரு விளையாட்டு வீரர்களிடம் கூட நுழைவு கட்டணம் என ஒரு ரூபாய் கூட வசூல் செய்யாமல் இது போன்று தான் தமிழக பாரம்பரிய கலையை வளர்க்க வேண்டும் . பணம் கொடுத்து இந்த கலையை நடத்தினால் இது விரைவில் அழிந்து விடும் என வருத்தத்துடன் கூறினார் . இதுபோன்று ஒரு சிலர் பணம் எதையும் எதிர்பார்க்காமல் கலையை வளர்க்க இருக்கத்தான் செய்கிறார்கள் .

 

தமிழக அரசு சிலம்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என அறிவித்ததோ அது முதல் இது மிகவும் பெருகிவிட்டது .

 

இது போன்ற போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்கள் முதல்வர் கோப்பைக் காண போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

 

எனவே இது போன்ற போலி சிலம்பக் கூடங்கள் , போலி சிலம்ப ஆசான்கள் நடத்தும் சிலம்பாட்ட போட்டிகளுக்கு தமிழக அரசு உரிய முறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலம் பரிசீலித்து அனுமதிக்க வேண்டும் என்பதே அனைத்து விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பமாகும் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.