Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜாதி சான்றிதழ் கேட்டு ஆசிரியர்கள் அடித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.

0

'- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15), கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி ஆசிரியர்களின் கண்டிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கஸ்பா பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த முத்துக்கிருஷ்ணனை நேற்று முன்தினம் திங்கள் கிழமை (ஜூன் 23, 2025) பள்ளியில் தலைமை ஆசிரியை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் திங்கட்கிழமை இரவு தனது வீட்டின் பின்புறம் உள்ள ஆஸ்பெடாஸ் சீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசார் மாணவனின் சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அக்கடிதத்தில், தனது சாவுக்கு ஆசிரியர்கள் பியூலா, மேரி, வளர்மதி மற்றும் தலைமை ஆசிரியர் ஆகிய 4 பேர் தான் காரணம் என மாணவன் தன் கைப்பட எழுதி இருந்தான் .

 

மேலும், மாணவனின் பெற்றோர், தாங்கள் பழங்குடியின காட்டு நாயக்கன் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், சாதி சான்றிதழ் இல்லாததாலும், அதைப்பெற அதிகாரிகள் அலைக்கழித்ததாலும் பள்ளியில் சாதிச் சான்றிதழ் கொடுக்க முடியாமல் போனதால் ஆசிரியர்கள் திட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்து முத்துகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனிடையே, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, பரமன்குறிச்சி அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பியூலா, மேரி, மற்றும் தலைமையாசிரியர் சத்யா (எ) ஞானசுந்தரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், இந்த நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.