ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடும் புதிய வாகனமும் வழங்க வேண்டும் என திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு .
நுகர்வோர் சேவை குறைபாடு காரணமாக ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடும் புதிய வாகனமும் வழங்க வேண்டும் என திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு .
திருச்சி தாராநல்லூா் வெள்ளை வெற்றிலைக்காரத் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ். அபுதாகிருதீன் (வயது 35). இவா் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள முகவாண்மை நிறுவனமொன்றில் கடந்த 25-02-2020 அன்று உரிய வரிகளுடன் ரூ. 2,04,499 பணம் செலுத்தி ஜாவா பைக் ஒன்றை வாங்கியுள்ளாா். பைக் வாங்கியது முதல் ஓடும்போதே திடீரென நின்றுவிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
இதுதொடா்பாக அபுதாகிருதீன், குறிப்பிட்ட தனியாா் முகவாண்மையிடமும், ஜாவா சா்வீஸ் மையத்திடமும் ஓராண்டாக பல முறை பழுதுபாா்த்தும் சரிசெய்யப்படவில்லையாம்.
இதனால் மனஉளைச்சலுக்கும், நஷ்டத்துக்கும் ஆளான அபுதாகிருதீன் நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்திடம் 8-07-2021 அன்று மனு தாக்கல் செய்தாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, சேவை குறைபாடு செய்து நஷ்டத்தையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியதற்காக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஜாவா நிறுவன மேலாளா், திருச்சி கண்டோன்மென்ட் ஜாவா முகவாண்மை, ஜாவா சா்வீஸ் மைய மேலாளா் ஆகியோா் ரூ. 1 லட்சம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ. 10 ஆயிரமும், பழுதடைந்த வாகனத்துக்கு பதிலாக புதிய பைக்கும் 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.