திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.8 மீதி சில்லறை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் அபராதம்.
திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 72 ரூபாய்க்கு இட்லி வாங்கியவருக்கு 8 ரூபாய் சில்லரை தராத வசந்தம் கேட்டரிங் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக 30 ஆயிரம் வழங்க விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுசூழல் பொது நலச் சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் வைகை அதிவேக விரைவு ரயிலில் ஏறி விழுப்புரத்திற்கு ரத்திற்கு பணயம் செய்து உள்ளார்.
காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து ஏறிய நிலையில் 9.30க்கு திருச்சி ரயில் நிலையத்தில் வந்துள்ளது. அப்பொழுது முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே அனுமதி பெற்று உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்த தனியார் கேட்டரிங் நிறுவனமான வசந்தம் கேட்டரிங் சார்பில் விற்கப்பட்ட தலா ரூ.30 ரூபாய் வீதம் 2 இட்லி பார்சல் ரூ 60-க்கும் இரண்டு வடை ரூ.20க்கு என மொத்தம் ரூ.80-க்கு வாங்கி உள்ளார். ரயில் கூட்ட நெரிசல் இருந்ததால் கீழே இறங்காமல் ரயிலில் இருந்தவாறு இட்லி, வடை பொட்டலத்தை வாங்கியுள்ளார். அப்பொழுது ரசீது கேட்ட போது கேண்டீன் ஊழியர் தர மறுத்துள்ளார்.
மேலும் பார்சலை வாங்கி பார்த்த போது அதன் மீது எம்.ஆர்.பி விலை ரூ.26 என இருந்தது. இதனால் ஆரோக்கியசாமி விற்பனையாளரை அழைத்து எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக இரண்டு இட்லி பார்சலுக்கு ரூ.8 வாங்கி உள்ளீர்கள் அதனை திருப்பி கேட்டதற்கு அவர் அலட்சியமாக பேசி விட்டு சென்றுள்ளார்.
மேலும் அவர், அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்த போது சாம்பார் மட்டும் இருந்தது சட்னி இல்லை. அளவும் குறைவாக இருந்தது. வேறு வழியில்லாமல் அதை சாப்பிட்ட ஆரோக்கியசாமி 11.40-க்கு விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டர் இரயில்வே போலீசாருக்கு புகார் கொடுத்து உள்ளார். தொடர்ந்து திருச்சி கோட்ட மேலாளர் கேட்டரிங் நிறுவன உரிமையாளருக்கும் கூடுதலாக வசூலித்த 8 ரூபாய் திருப்பி வழங்க கோரி புகார் மனு எழுத்து பூர்வமாக அளித்துள்ளார். விசாரணை செய்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சம்மந்தப்பட்ட கேட்டரிங் உணவகத்திடமிருந்து ரூ.1000 அபராதம் வசூலித்து உள்ளார்.
ஆனால் ஆரோக்கியசாமிக்கு கொடுக்க வேண்டிய 8 ரூபாய் கொடுக்கவில்லை இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிஷோர்குமார் மூலம் புகார் செய்தார். எதிர்தரப்பில் வசந்தம் கேட்டரிங் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கே.சுரேஷ்பாபு அவர்களும் இரயில்வே சார்பில் முரளி அவர்களும் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சதிஷ்குமார் உறுப்பினர்கள் மீராமொய்தின், அமலா, ஆகியோர் கூடுதலாக பெற்ற தொகை 8 ரூபாயால் மன உலைச்சலுக்கு ஆளாக்கியமைக்கு புகார் தாரருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடாகவும் வழக்கு செலவுக்காக ரூபாய் 10 ஆயிரமும் கூடுதலாக பெற்ற தொகை 8 ரூபாயும் வழங்கவும் தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் கேட்டரிங் உரிமையாளர் பணம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மாதம் 9 சதவிகிதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.