திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம், காவடி எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகைதந்த நிலையில், அவர்கள் வரிசையில் காத்திருந்து உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் பக்தர் ஒருவர் வரிசையின் குறுக்கே நுழைய முயன்றதாக தெரிகிறது. இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜீயபுரம் டிஎஸ்பி பழனி, அந்த பக்தர் குடும்பத்தினருடன் வந்திருந்ததை கூட பாராமல்.. போடா நாயே.. ஒழுக்கமா வரிசையில் வாடா நாயே என திட்டியதுடன், மயிரு மாதிரி பேசாத, செருப்பைக் கொண்டு இங்கேயே அடித்து விடுவேன், இவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என கடுமையான சொல்லாடலைப் பயன்படுத்தி பொதுமக்கள் நிற்கும் இடத்தில் இடைவெளி விடாமல் வசைப்பாடியுள்ளார்.
கூட்டத்தை ஒழுங்கு படுத்தவே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறு விதிகளை மீறி வரும் மக்களை ஒழுங்குப்படுத்தி வரிசையில் அனுப்புவதற்கு பதிலாக கடும் சொல்லாடலை பயன்படுத்தி தரக்குறைவாக பேசுவது என்பது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கும் மக்கள், இவ்விடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.