ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது, மது போதையில் இருந்த 2 தலைமைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீஸார் ஈடுபட்டனர். இதில், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பிரபாகரன், சுரேஷ் என்ற இரு தலைமை காவலர்களுக்கு, 7-ம் தேதியன்று, கோயில் நுழைவாயில் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

நள்ளிரவு 12 மணிக்கு பணிக்கு வர வேண்டிய அவர்கள், அதிகாலை 3 மணிக்கு காரில் சீருடையுடன் வந்துள்ளனர்.. அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய திருப்பூர் மாவட்ட டி.எஸ்.பி ஒருவர் அவர்களிடம் பணி விவரங்களை கேட்டுள்ளார். இதில், இருவரும் பணி நேரத்தில் மது போதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் அதிகாலை 6 மணி வரை தன் கண்காணிப்பில் வைத்திருந்த டிஎஸ்பி, அதன்பின் இருவரையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளச் செய்தார். அதில், இருவரும் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து, ஈரோடு எஸ்பி சுஜாதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பணியின் போது மதுபோதை யில் இருந்த இரு தலைமைக் காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து செய்து உத்தரவிட்டார்.