சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பட்டாலியன் பிரிவில் போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கியதாக உதவி கமாண்டண்ட் சிக்கியுள்ளார்.
விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம் வாங்குவதாகவும், வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றதாகவும் அவ்வப்போது புகார்கள் கிளம்பும். நேர்மையான எத்தனையோ அதிகாரிகள் இருந்தாலும் இப்படி ஒரு சில போலீசார் லஞ்சம் வாங்கி, காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்வது போல, தற்போது போலீசாரிடமே லீவு கொடுக்க லஞ்சம் வாங்கி உதவி கமாண்டண்ட் ஒருவர் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .
சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சென்னை ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-வது பட்டாலியன் பிரிவு உள்ளது. இதில், உதவி கமாண்டண்ட் (உதவி தளவாய்)ஆக முத்துகிருஷ்ணன் (வயது 57) என்பவர் பணியாற்றி வந்தார். கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. அதாவது, பட்டாலியனில் லீவ், மெடிக்கல் லீவ் மற்றும் அனுமதி கேட்டு வரும் காவலர்களிடம் பணம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது பற்றி ஆயுதப்படை போலீசார் தரப்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆயுதப்படை கூடுதல் டிஜிபி, இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். இதன்படி விசாரணை நடத்திய அதிகாரிகள், உதவி கமாண்டண்ட் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். இதில், அவரது வங்கி கணக்கில் 2 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் கிரெடிட் ஆனது தெரியவந்தது. அதாவது காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க அவர்களிடம் இருந்து ஜிபே மூலமாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் தரப்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்று, காவலர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு முறைகேட்டில் ஈடுபட்ட உதவி கமாண்டண்ட் முத்துகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தற்போது முத்துகிருஷ்ணன், ஒரு மாதமாக விடுமுறையில் உள்ளாராம். லீவு கொடுக்க லஞ்சம் பெறுவதாக முதல்வர் தனிப்பிரிவில் காவலர்கள் அளித்த புகாரில் போலீஸ் டிஜிபி இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுமக்களிடம் லஞ்சம் பெற்று கையும் களவுமாக சிக்கி சில போலீசார் நடவடிக்கைக்கு உள்ளாகும் சம்பவங்களை அடிக்கடி கேள்வி படும் நிலையில், காவல்துறையை சேர்ந்தவர்களிடமே லஞ்சம் பெற்று உயர் அதிகாரி ஒருவர் தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பது பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.