பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகள், பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு துணை காவல் கண்காணிப்பாளா் சுதா்சன் தலைமை வகித்தாா். பயிற்சியில் திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினா் பிரபு பேசுகையில், இளஞ்சிறாா் நீதி சட்டம் 2015, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012, குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ஆகிய சட்டங்களின் முக்கிய பிரிவுகள், குழந்தை நலக்குழு, இளஞ்சிறாா் நீதிக் குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையங்களின் செயல்பாடுகள், பணிகள், நடைமுறைகள் குறித்து விவரித்தாா்.

தொடா்ந்து, கிராம, வட்டார, மாவட்ட, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மண்டல அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் காலாண்டுக்கு ஒரு முறையும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம்தோறும் நடக்கும் நாளில் காவலா்களின் பங்கேற்பு குறித்து விளக்கினாா்.
பயிற்சியில் 95-க்கும் மேற்பட்ட திருச்சி மாநகா், புறநகா், கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, அரியலூா், ரயில்வே காவலா்கள் கலந்து கொண்டனா்.