திருச்சியில் நடைபெற்ற விபத்துகளில் இரண்டு வாலிபர்கள் பலி
போலீசார் விசாரணை
திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஸ் (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நிம்மல் ஜோஸ் தனது மோட்டார் சைக்கிளில் தென்னூர் உழவர் சந்தையில் இருந்து நீதிமன்றம் சாலை வழியாக எம்.ஜீ.ஆர். சிலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த நிம்மல் ஜோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிம்மல் ஜோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதே போன்று மற்றொரு சம்பவத்தில்
திருச்சி சென்னை சாலையில் தனியார் டைல்ஸ் கடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்டதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான ஸ்ரீவில்லிபுத்தூர் கொடிகுலத்தை சேர்ந்த கனி ராஜாவை (வயது 39) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.