Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நிறைவு விழாவில் காவல் உதவி செயலியை அறிமுகப்படுத்திய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் .

0

'- Advertisement -

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 2025- நிறைவு விழா

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ( NIT, TRICHY ) பெண்கள் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் 2025-ன் இறுதி நிகழ்வு நேற்று 13.03.2025 நடைபெற்றது.

 

நிகழ்ச்சி, வாழ்த்துப் பாடலுடன் தொடங்கி, அதைத் தொடர்ந்து பெண்கள் பிரிவின் உறுப்பினர் முனைவர். வி.கே.கார்த்திகா அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. அவர் தமது உரையில் பெண்களையும், பெண்மையையும் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும், நம்பிக்கை, உள்ளடக்கிய அணுகுமுறை, சமத்துவம் மற்றும் நட்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதன் அவசியத்தையும் பற்றி பேசினார்.

 

முதன்மை விருந்தினாராக கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி காவல் ஆணையர் என்.காமினி ஐ.பி.எஸ் அவர்களுக்கு என்.ஐ.டி திருச்சி இயக்குநர் பேராசிரியர் ஜி. அகிலா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். இயக்குநர் தமது தலைமை உரையில், ஒருவரின் இலக்குகளை நோக்கிய பயணத்தில் அச்சமின்மையை வளர்த்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், அவர் பங்கேற்பாளர்களை, தங்களின் விழைவுகளில் கவனம் செலுத்துமாறும், வெளிப்புற விமர்சனங்களைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்குமாறும் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்.

 

தனது சிறப்புரையில் என்.காமினி ஐ.பி.எஸ் அவர்கள், இந்திய அரசியலமைப்பின் முகவுரையை குறிப்பிட்டு, அது நீதி, சமத்துவம் மற்றும் அனைத்து குடிமக்களின் அதிகாரமளிப்பதற்கான உறுதிப்பாட்டை எவ்வாறு வலியுறுத்துகிறது என்பதை விளக்கினார். பஞ்சாயத்துகளில் கிராமப்புற பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது மற்றும் இட ஒதுக்கீடுகளால் குறிப்பிடத்தக்க அளவில் தலைமைப் பொறுப்புகளில் அவர்களின் பங்களிப்பு வளர்ந்து குறித்து அவர் பேசினார். வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் குறித்தும், சட்ட அமலாக்கம் இத்தகைய பிரச்சனைகளை எவ்வாறு கையாளுகிறது என்பது பற்றிய விரிவான புரிதலை பங்கேற்பாளர்களுக்கு வழங்கினார். மேலும், குடிமக்கள் தங்கள் உதவிக்காக காவல்துறையை விரைவாகவும், எளிதாகவும் தொடர்புகொள்ள ஒரு மதிப்புமிக்க கருவியாக உள்ள “காவல் உதவி” செயலியையும் அறிமுகப்படுத்தினார். செயலியின் அம்சங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்துடன் விரைவான மற்றும் திறமையான தொடர்பை எவ்வாறு எளிதாக்கும் என்பதை செயல்முறை மூலம் விளக்கினார். அவரது உரை சவால்களை எதிர்கொள்வது மட்டுமில்லாமல் நம்பிக்கையையும் தூண்டி, நம்பிக்கை, மீள்திறன் மற்றும் கூட்டு முயற்சிகளுடன், அனைவரும் பாதுகாப்பான, சமத்துவமான உலகை உருவாக்குவதற்காக பணியாற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தியது.

உள்புகார்கள் குழுவின் ( Internal Complaints Committee) தலைவர், பேராசிரியர் பி.கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கி, ‘செயல்களை துரிதப்படுத்துதல்’ என்பதன் முக்கியத்துவம் பற்றிப்பேசி, அது ஏற்கனவே, நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளது என்பதை எடுத்துக்கூறினார். ஒருவரின் உடல் மற்றும் மனநலனைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். சுய பராமரிப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் அனைவரையும் ஊக்குவித்தார். சமூக முன்னேற்றத்திற்குத் திறம்பட பங்களிப்பதற்கும் சவால்களை சமாளிப்பதற்கும், தனிப்பட்ட ஆரோக்கியம் அடிப்படையானது என்பதை விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவின் தலைவர், பேராசிரியர் சி.வேல்மதி அவர்களின் நெஞ்சம் நிறைந்த நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிகழ்ச்சியை மகத்தான வெற்றிகரமாக்கிய அனைத்து பங்கேற்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

நிறைவு விழாவில், NIT திருச்சிராப்பள்ளியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

 

வாரத்தின் தொடக்கத்தில் கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள்-2025, பாலின சமத்துவத்தை நோக்கிய, தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான அதிகாரம், ஒற்றுமை மற்றும் நம்பிக்கை உணர்வுடன் நிறைவடைந்தது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.