காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிபவர் காவலர் அருண் கண்மணி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தனியார் ஷூ கம்பெனிக்கு சொந்தமான மினி வேனை மடக்கிய அருண் கண்மணி, ஏன் என்மீது இடிப்பது போல வருகிறாய் எனக்கேட்டு தகராறீல் ஈடுபட்டுள்ளார். வேன் டிரைவர் சேட்டு என்பவருக்கு காவலர் அதிக மது போதையில் இருப்பது தெரிந்தது. அவரும் எதற்கு பிரச்னை என்பது போல அமைதியாகவே இருந்துள்ளார். தன்மீது எந்த தவறும் இல்லை என்று மட்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

ஆனால் தலைக்கேறிய மது போதையில் இருந்த அருண் கண்மணி, டிரைவர் சேட்டுவை கே.வி.குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் காவலரிடம், டிரைவர் சேட்டு மீது வழக்குபதிவு செய்யும் படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். பெண் காவலர் இதுகுறித்து கே வி குப்பம் காவல் ஆய்வாளருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் என்ன செய்கிறோம் என்றே அறியாத அளவில் போதையில் இருந்த காவலர் அருண் கண்மணி, தனது அனைத்து ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதனால் பெண் காவலர் அலறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவலர்கள் அருண் கண்மணி பிடித்து துணிகளை அணிவித்துள்ளனர். உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோதனைக்காக வந்த இடத்திலும் காவலர் அருண் கண்மணி, அமைதியாக இருக்கவில்லை. அங்குள்ள கண்ணாடி கதவுகளை உடைத்துள்ளார். அதில் காவலர் அருண் கண்மணிக்கு கையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிப்பதற்காக வந்த அரசு மருத்துவர் செந்திலிடமும் தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்து ரகளை செய்துள்ளார். இந்நிலையில் குடியாத்தம் அரசுமருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டு அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு வார்த்தைகளால் பேசியதாக மருத்துவர் செந்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குடியாத்தம் காவல் நிலையத்தில் பொது சொத்தை சேதப்படுத்தியதாகவும் அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் செய்ததாகவும் காவலர் அருண் கண்மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கே வி குப்பம் காவல் நிலையத்தில் ஷூ கம்பெனி வேன் ஓட்டுனர் சேட்டு கொடுத்த புகாரின் பேரிலும் காவல் நிலையத்தில் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்து காவலர் அருண் கண்மணியை சிறையில் அடைத்தனர். மேலும் மது போதையில் இருந்த அருண் கண்மணி சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் காவல் நிலையத்தில் பணி புரிந்த போது மது போதையில் பானிபூரி கடை நடத்தி வந்த வட மாநில இளைஞரிடம் ரகலையில் ஈடுபட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தற்போது காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணி சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.