ஹெல்மெட்டுக்கு ஆயிரம், எதிர்த்து பேசினதுக்கு 2000, வீடியோ எடுத்து போடு பேமஸ் ஆகி கொள்கிறேன் என கூறிய பெண் சப் இன்ஸ்பெக்டர்.
ஹெல்மெட் போடாததுக்கு ஃபைன் 1000 ரூபாய்.. எதிர்த்து பேசியதற்கு 2000 ரூபாய்”.. என சென்னை போக்குவரத்து காவல்துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் கூறியதால், அந்த போக்குவரத்து பெண் போலீசிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மருத்துவமனை செல்வதற்காக ராமாபுரம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் ஓட்டிய நபர் மட்டும் ஹெல்மெட் அணிந்திருந்தார். பில்லியனில் அமர்ந்திருந்தவர் ஹெல்மட் அணியாமல் இருந்துள்ளார்.
ராமாபுரம் சிக்னல் அருகே சென்றபோது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், அவர்களிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஹெல்மெட் அணியாததால் அவருக்கு ரூபாய் 1000 அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது அவர்கள், நாங்கள் கோர்ட்டில் அபராதத்தை கட்டிக் கொள்கிறோம், இப்போது பணம் இல்லை எனக் கூறியுள்ளனர். இருப்பினும் அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை சப் இன்ஸ்பெக்டர், இப்போதே ஃபைன் கட்ட வேண்டும், இல்லையென்றால் வண்டியை பறிமுதல் செய்வோம் எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவ அவசரத்திற்காக செல்வதால் பணம் இல்லை, இப்போது கட்ட முடியாது, 15 நாட்களுக்குள் கோர்ட்டில் கட்டிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால், அபராதத்தை கட்டினால் தான் போக முடியும் எனக் கூறி, வண்டி சாவியையும் போனையும் வாங்கியுள்ளார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.
இந்நிலையில், இது தொடர்பாக வீடியோ எடுத்துள்ளார் அந்த இளைஞர். அதற்கு பெண் சப் இன்ஸ்பெக்டர், “நீ வீடியோ போடு.. நான் ஃபேமஸ் ஆகிக்கிறேன். எதிர்த்துப் பேசினா 2000 ரூபாய் அபராதம் கட்டணும். மொத்தமா 3000 ரூபாய் கட்டவேண்டும்” எனக் கூறியுள்ளார். பெண் சப் இன்ஸ்பெக்டர் – இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, தனக்கு ரூபாய் 3000 அபராதம் விதிக்கப்பட்ட சலானுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த இளைஞர், வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் அளிப்பேன் எனக் கூறியுள்ளார். ஹெல்மெட் போடாததற்கு அபராதம் கட்டுகிறேன், ஆனால், போலீசை எதிர்த்துப் பேசியதற்கு 2000 அபராதம் எனச் சொன்னால் எப்படி கட்டுவது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.