நண்பருடன் சென்ற பெண்ணை மிரட்டி ஜி பேயில் பணத்தைப் பெற்று கூட்டு பலாத்காரம். வாலிபர்கள் சுட்டு பிடிப்பு .
கிருஷ்ணகிரியில் மலைக்கு உறவினருடன் சென்ற பெண்ணை, மிரட்டி, தாக்கி கூட்டு பலாத்காரம் செய்து, வழிப்பறி செய்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் சையத் பாஷா மலைக்கு, கடந்த 19ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், 30 வயது உறவுக்கார பெண்ணுடன் சென்றுள்ளார். மலையின் மேற்பகுதிக்கு சென்றபோது, அங்கு மதுபோதையில் இருந்த 4 இளைஞர்கள், இவர்களை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல் உள்ளிட்டவைகளை பறித்தனர். அந்த ஆண் வைத்திருந்த ரொக்கம் ரூ.7 ஆயிரத்தை பறித்துக்கொண்டதுடன், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7 ஆயிரத்தை கூகுள் பே மூலம், தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
பின்னர், அந்த 4 பேரில் 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை 2 பேர் தாங்கள் வைத்திருந்த செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் முடிந்த நிலையில், அந்த ஆணும், பெண்ணும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். அப்போது அந்த பெண் அழுதவாறு சம்பவத்தை கூறிவிட்டு சென்றுவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மலையடிவாரத்தில் இருந்த பொதுமக்கள், கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள டவரில் பதிவான செல்போன் எண்களை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்டவர்கள் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து, கூகுள் பே மூலம் பணம் யாருடைய செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விவரம் சேகரித்தனர்.
அதில், கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து வந்து, காவல் நிலையத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீசாரிடம் நண்பர் அபிஷேக் (வயது 20) என்னுடன் இருந்தார். அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ்(22), நாராயணன் (21) என ஒப்புக்கொண்டார். இதையடுத்து கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், சுரேஷ் மற்றும் நாராயணன் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்படி, நேற்று காலை பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்ஐ. பிரபாகர், ஏட்டு குமார், போலீஸ் விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் பிரபாகர், குமார் ஆகியோரை தாக்கி விட்டு தப்பியோடினர். உடனே போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு, சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால் சுரேசும், நாராயணனும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், சுரேஷ் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பி தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கர், டிஎஸ்பி முரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் ஆகியோரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தை எஸ்பி தங்கதுரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதே போல தடயவியல் நிபுணர்களும் சென்று விசாரணை நடத்தி செய்தனர்.