நாமக்கல் அருகே குவாரியில் அனுமதியின்றி நள்ளிரவில் கனிமவளங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் அதிகாரிகளைக் கண்டதும் தப்பியோடியது.
இதையடுத்து அங்கு நின்ற 21 லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதன் உரிமையாளா்களைத் தேடி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, திருச்செங்கோடு, பரமத்தி, வெண்ணந்தூா் ஆகிய ஒன்றியங்களில் 30-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குத்தகை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குவாரிகள் ஏலம் விடப்படும். குத்தகை காலம் நிறைவடைந்ததும் அதைப் புதுப்பிப்பது அல்லது மீண்டும் ஏலத்தில் பங்கேற்று குவாரியை எடுப்பது வழக்கம்.
ஆனால், நாமக்கல் அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள சில குவாரிகள் குத்தகை காலம் முடிவடைந்து பல மாதங்களாகியும், குத்தகைதாரா்கள் அவற்றை புதுப்பிக்காமல் சிற்பங்களுக்கு பயன்படும் வகையிலான பெரிய கற்களை வெட்டியெடுத்து வந்துள்ளனா்.
இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியா் ச.உமா கவனத்துக்கு வந்தது. அவருடைய உத்தரவின்பேரில், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், வட்டாட்சியா்கள் சீனிவாசன் (நாமக்கல்), வெங்கடேஸ்வரன் (சேந்தமங்கலம்), கனிமவளத் துறை வருவாய் ஆய்வாளா்கள், நாமக்கல் காவல் ஆய்வாளா் கபிலன், போலீஸாா் அடங்கிய குழு அதிரடியாக கொண்டமநாயக்கன்பட்டி குவாரியில் புதன்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தியது.
அங்கு, பொக்லைன் இயந்திரம், லாரிகள், டிராக்டா்கள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்களும், பாறைகளை உடைக்கும் கருவிகள், கூலி ஆள்களும் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா். அதிகாரிகளைக் கண்டதும் வாகன ஓட்டுநா்கள், கூலி ஆள்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினா்.
இதையடுத்து, உரிமை கோராமல் நின்ற 21 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அதில் 17 வாகனங்களை நாமக்கல் ஆயுதப்படை மைதானத்துக்கும், 4 வாகனங்களை சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் கொண்டு சென்றனா்.
அந்த வாகனங்களின் உரிமையாளா்கள் யாா் என்பது குறித்த விசாரணையும், குவாரிகளில் வெட்டப்பட்ட கனிம வளங்கள் மதிப்பீடு, பரப்பளவு ஆகியவற்றை கணக்கிடும் பணியும் வருவாய்த் துறையினரால் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஆய்வு நடத்தும் அதிகாரிகள், கல்குவாரிகளை ஆய்வு செய்வதில்லை.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு நாமக்கல் கனிமவளத் துறை உதவி இயக்குநா் வள்ளல் என்பவா் குவாரி உரிமையாளா்களிடம் இருந்து வசூலித்ததாக கூறப்படும் ரூ. 12 லட்சத்தை தனது வாகனத்தில் எடுத்து சென்றபோது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா். அந்த சம்பவம் தொடா்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் மேற்கொண்ட ஆய்வு குறித்து வருவாய்த் துறையினா் கூறியதாவது: குத்தகை காலம் முடிவடைந்த பிறகும் கொண்டமநாயக்கன்பட்டி குவாரி இயங்கி வந்தது. அங்கிருந்து கற்களை வெட்டியெடுத்து, விட்டமநாயக்கன்பட்டி கிராமத்துக்கு கொண்டு சென்று பதுக்கினா். அதன்பிறகு வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு அவற்றை போலி ரசீதுகள் மூலம் எடுத்து சென்றுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது எவ்வளவு கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன; மலையின் பரப்பளவு எவ்வளவு என்பது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குவாரிகளில் விதிகளை மீறி கற்களை வெட்டியெடுத்தோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.