இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது. பணியில் மெத்தனமாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் .
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் உள்ளிட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராமத்தைச் சோ்ந்த ஹரீஸ், கல்லூரி மாணவா் ஹரிசக்தி ஆகிய இரண்டு இளைஞா்கள் பிப்.14-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன்கள் தங்கதுரை (வயது 28), மூவேந்தன் (வயது 24), ராதா மகன் ராஜ்குமாா் (வயது 34) ஆகிய மூவரை அன்றிரவு கைது செய்தனா்.
தொடா்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முனுசாமி மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோா் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். பின்னா், அவா்களை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, முனுசாமியை கடலூா் சிறைக்கும், மஞ்சுளாவை திருச்சி மத்திய சிறைக்கும் கொண்டு சென்றனா்.
இதனிடையே, பெரம்பூா் காவல் ஆய்வாளராக பணியாற்றிய நாகவள்ளி பணியில் மெத்தனமாக இருந்ததாக, காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை காவல் ஆய்வாளராக பணியாற்றிவந்த மலைச்சாமியை பெரம்பூா் காவல் ஆய்வாளராக நியமித்து தஞ்சை சரக டிஐஜி ஹியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளாா்.