திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி. பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு.வேகத்தடை அமைக்க கோரிக்கை .
திருச்சி அருகே தனியார் பேருந்து மோதி கொத்தனார் பலி.பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் ராஜா ( வயது 34). கொத்தனாராக வேலை பார்த்து வந்து உள்ளார். திருமணமான இவருக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் ராஜா வழக்கம் போல கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் லால்குடியில் இருந்து அகிலாண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலவாளாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே அவர் சென்ற போது திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி வேகமாக சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து ஒன்று ராஜா ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், பேருந்தின் அடியில் சிக்கிய ராஜா சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு படுகாயத்துடன் சுயநினைவு இழந்து இருந்த ராஜாவை பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவலின் பேரில் சமயபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சாலை விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அரியலூர் மாவட்டம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் இளையராஜா மற்றும் நடத்துனர் இருவர் மீதும் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் அதி வேகமாக செல்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி இந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.