Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நான்,சசிகலா, டிடிவி தினகரன் அனைவரும் எவ்வித நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் . ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி .

0

'- Advertisement -

அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ” இந்த இயக்கம் யாரால் நிறுவப்பட்டது, யாரால் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகாலம் இரண்டு தலைவர்களும் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய இயக்கம் இந்த இயக்கம். இதில் விதி 45ன் படி, அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் பொதுச்செயலாளார் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை யாராலும், எந்த சூழ்நிலையாலும் மாற்ற முடியாது.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த விதியின் படிதான் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் ஆனார். ஆனால் இப்போது பொதுச்செயலாளர் தேர்வு எப்படி நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். பொதுக்குழு மூலமாக சட்டவிதியை திருத்தவோ, ரத்து செய்யவோ கூடாது என்ற அதிமுக விதியை மீறி செயல்பட்டுள்ளனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டதைத்தான் தவறு என்று நாங்கள் நீதிமன்றத்தில் வழக்காடி கொண்டிருக்கிறோம். அதை தீர்வுக்கு கொண்டு வருகிற பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்று சொன்னோம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி , தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னார். நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ. அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கும் உள்ளது என்று ஒரு தீர்ப்பு உள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அத்திக்கடவு -அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படம் இல்லை என்று கூறி வெடித்திருக்கிறாரே?

இந்த திட்டத்துக்கு விதை போட்டவர் ஜெயலலிதா. அதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு பாராட்டு விழா எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதில் பல்வேறு கருத்துகளை செங்கோட்டையன் சொல்லியிருக்கிறார். விவாதங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது அவர்தான்.

கட்சியில் எடப்பாடி பழனிசாமி தன்னையே முன்னிலைப்படுத்திருக்கிறார். கட்சியை ஆரம்பித்தவர்களை மறைமுகமாக இருட்டடிப்பு செய்கிறார் என்ற குமுறல் செங்கோட்டையனிடம் உள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அவருடைய மனசாட்சிபடி நடந்திருக்கிறார்… இதெற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதுதான். அதிமுகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தான். தலைவர் காலத்திலேயே மாவட்ட செயலாளர் ஆனவர். தற்போது அவர் எடப்பாடி பழனிசாமியுடன் தான் இருக்கிறார். ஜெயலலிதா இருக்கும் போது நானும் செங்கோட்டையனும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். திருச்சி, மதுரை மாநாட்டை நாங்கள்தான் முன்னின்று நடத்தினோம். 38 இடங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வென்றபோது நாங்கள் தான் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று வேலை செய்தோம். டேப் பிடித்து அளந்து ஸ்டேஜ் போடுவதை கூட செய்தோம். இதை யாராலும் மறுக்க முடியாது.

செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணி உருவாகுமா? நீங்கள் அவருடன் பேசுவீர்களா?

அவரிடம் தான் கேட்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி பாஜகவோடு கூட்டணி இல்லை என்று உறுதியோடு இருக்கிறார்… நீங்கள் அதிமுகவோடு ஒன்றிணைந்துவிட்டால் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

நான் இன்றும் என்.டி,ஏ.வில் தான் இருக்கிறேன். ஒன்றிணைந்துவிட்டால் அதிமுக தேசிய கூட்டணியில் இணைவதுதான் நல்லது. இன்று இந்தியா கூட்டணி எந்த நிலைமையில் இருக்கிறது என்று பாருங்கள். 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் காங்கிரஸின் நிலைமை என்ன? .140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், பல்வேறு மொழிவாரி மாநிலங்களை ஒரு குடைக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி. அதை நாம் பாராட்ட வேண்டும்.

வட மாநிலங்களில் பாஜக அரசியல் கட்சிகளை உடைத்து, புதிதாக ஒரு அணியை உருவாக்கும் நிலைமை இருக்கிறதே? அதுபோன்று தமிழகத்திலும் ஒரு அணியை உருவாக்கி பாஜக தலைமையில் ஆட்சி அமையுமா?

Suresh

நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது. தமிழ்நாடு வேறு… வடமாநிலங்கள் வேறு. தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் எதை விரும்புகிறார்களோ, அதை அதிமுக செய்துகாட்டும். ஜெயலலிதாவும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்… எதிர்த்தும் நின்றிருக்கிறார்… ஆனால் எங்கள் திராவிட கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் தானே விலகிப்போனார்.

அண்ணாமலையின் பேச்சுதான் கூட்டணி முறிவுக்கு காரணம் என்று சொல்கிறார்களே?

அந்தந்த கட்சி தலைவர், அவர்களுடைய கட்சியை வளர்க்கத்தான் கருத்துகளை பரிமாறுவார்கள். அதை தவறு என்று சொல்ல நாம் யார்?

அண்ணா… ஜெயலலிதாவை பற்றி எல்லாம் பேசிய பிறகுதானே கூட்டணி முறிந்தது?

நான் அந்த அடிப்படையில், நோக்கத்தில் பேசவில்லை என்று அண்ணாமலையே சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தில் நடக்கும் அரசியலை பற்றி என்னால் கணித்து சொல்ல முடியாது.

நடிகர் விஜய்… என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது…

ஐயோ சாமி, சரணம் ஐயப்பா என்று கிண்டல் அடிக்கும் விதமாக பேசிய ஓபிஎஸ், அரசியல் களத்தில் விஜய் எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியம். தமிழர்களின் நலன், பாரம்பரியம், அனைத்து மக்களையும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்கும்நோக்கம் ஆகியவை அவரிடம் இருக்கிறதா? ஆகியவை அவரது வெற்றி தோல்வியை உறுதி செய்யும்.

அமைச்சர் ஐ.பெரியசாமி 2026 தேர்தலில் 5 முனை போட்டி நடக்கும். 234 தொகுதிகளிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருக்கிறாரே?

அரசியலில் 100 கட்சிகள் இருக்கிறது என்றால், அனைத்து கட்சிகளும் நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் என்ன சொல்வது.

விஜய் பாஜக கூட்டணிக்கு வந்தால்?

தேச நலன் கருதி யாரை சேர்ப்பது… சேர்க்க கூடாது என்பது மத்திய அதிகாரத்துக்கு உட்பட்டது.

பெரியாரை சீமான் அவதூறாக பேசுகிறார்… நீங்கள் கண்டிக்கவில்லையே?

நான் அவரை போய் கடிப்பதா… திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியே பெரியார்தான். தந்தை பெரியார் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்திருக்கிறார். அவரது கடவுள் மறுப்பை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை. அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.

பாஜகவினரும் பெரியாரை விமர்சிக்கின்றனரே? சீமான் சொல்வதை எச்.ராஜா வரவேற்கிறாரே?

சின்ன சின்ன பாயிண்டுகளை வரவேற்பார்கள். ஆனால் முழுமையாக எதிர்க்கத்தான் செய்வார்கள் என்று பதிலளித்தார்.

மேலும் அவர் நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எவ்வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக உள்ளோம்.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெற முடியும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைவது அனைவருக்கும் நல்லது எனவும் கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.