திருச்சி: இந்த காலத்திலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என வாழும் பெண். வரதட்சனை வாங்கி வா என குடித்துவிட்டு துன்புறுத்தும் கணவனுடன் சேர்த்து வாழ வைக்க கோரி பெண் கண்ணீர் வேண்டுகோள்.
கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டு இளம் பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கணவரின் வீட்டில் இருந்து தன்னை வெளியேற்ற போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் திருச்சி அருகே லால்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழ அரசூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் – லீலாவதி தம்பதியின் மகள் பிரியா. இவருக்கும், கீழ அரசூர் அருகே மால்வாய் கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன், செல்லம் தம்பதியின் மகன் அறிவழனுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக பிரியா குடும்பத்தினர் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சீர் வரிசையாக வழங்கி உள்ளனர். மேலும் 30 பவுன் நகை போட்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கை நன்றாக சென்ற நிலையில் சில நாட்களிலேயே அறிவழகனின் சுயரூபம் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் மனைவி பிரியாவை தகாத வார்த்தையில் பேசி அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் தனக்கு ரூ.30 லட்சம் கடன் இருப்பதால் மாமனாரிடம் சென்று ரூ.10 லட்சம் பணம் வாங்கி வர கூறி அன்பழகன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு அன்பழகனின் அப்பா, அம்மாவும் இதற்கு உடந்தையாக இருந்து பிரியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
திருமணம் ஆகி 5 வருடங்கள் மேலாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணம் ஆகி ஒன்றரை வருடத்திலேயே பணம் வாங்கி வர கூறி பிரியாவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அடித்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அறிவழகன் லால்குடி சார்பு நீதிமன்றத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என வழக்குக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து பிரியா லால்குடி சார்பு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் அறிவழகன் வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார்.
இதனால் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என லால்குடி சார்பு நீதிமன்றத்தில் பிரியா வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் அறிவழகன் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. விவாகரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்து விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் 2 வருடங்களாக தனது பிறந்த வீட்டிலேயே இருந்து வந்த பிரியா, கணவன் அறிவழகன் வெளிநாட்டிலிருந்து வருவதாக தகவல் அறிந்து மால்வாயிலுள்ள அறிவழகன் வீட்டிற்கு கடந்த மாதம் 25ம் தேதி வந்துள்ளார். அப்போது அவரை மாமனார், மாமியார் வீட்டிற்குள் விடாமல் தகாத வார்த்தையில் பேசி அடித்துள்ளனர், இருப்பினும் பிரியா கணவர் வீட்டிலேயே தங்கி விட்டார். இதனால் வெளிநாட்டில் இருக்கும் அறிவழகனுக்கு தகவல் தெரிவித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். இதையடுத்து போலீசாரும் மால்வாய் வந்து அறிவழகன் குடும்பத்தினருக்கு ஆதரவாக பிரியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டி உள்ளனர் .
ஆனால் பிரியா தான் கணவனுடன் வாழ வேண்டும் என அங்கேயே இருந்தால் அவரது மாமியார், மாமனார் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இந்நிலையில் தனது கணவர் அறிவழனுடன் தன்னை சேர்த்து வாழ வைக்க வேண்டும் என கண்ணீர் மல்க பிரியா தெரிவித்தார்.
இந்த பிரச்னை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகையில், தினமும் அறிவழகன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது தாய், தந்தையும் அடித்து துன்புறுத்துவர். தகராறு நடக்கும்போது இது குறித்து கேட்டால் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என மது போதையில் அறிவழகன் திட்டுவார் என கூறினர்.