போதைப் பொருள் கடத்திய கும்பலிடம் ரூ.1.25 லட்சம் ஆட்டைய போட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட எட்டு காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.டிஐஜி வருண்குமார் அதிரடி நடவடிக்கை
கரூர் அருகே போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள், கரூா் வழியாக கடத்தப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு ஜன. 30-ஆம் தேதி கிடைத்த ரகசிய தகவலையடுத்து வெங்கமேடு, குளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில் போலீஸாா் 8 போ் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது காருக்குள் 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜலாா் பகுதியைச் சோ்ந்த கேவா்சன்(வவயது 40), ஹரிராம்(வயது 27), சுரேஷ்(வயது 19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
தொடா்ந்து மூன்று நபர்களையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் கேவா்சன் உள்ளிட்ட 3 பேரிடமும் போலீஸாா் குட்கா பறிமுதல் செய்தபோது, அவா்கள் வைத்திருந்த ரூ.1.25 லட்சம் பணத்தை வெங்கமேடு காவல் ஆய்வாளா் (பொ)மணிவண்ணன் உள்ளிட்ட 8 அந்த பணத்தை பதுக்கியதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து அவா்கள் 8 பேரிடமும் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் வருண்குமாா் விசாரணை மேற்கொண்டாா். இதில், காவல் ஆய்வாளா் மணிவண்ணன், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், தாந்தோன்றிமலை காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், வெங்கமேடு காவல் உதவி ஆய்வாளா் சித்ராதேவி, வெங்கமேடு தலைமைக்காவலா் ரகுநாத், வெங்கமேடு காவலா் உதயகுமாா், கரூா் நகர காவல்நிலைய காவலா்கள் விக்னேஷ், தம்பிதுரை ஆகியோா் குட்கா கடத்தி வந்தவா்களிடம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்து, அதை கணக்கில் காட்டாமல் அதனை தாங்களே பதுக்கி பிரித்துக் கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து 8 பேரையும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி டிஐஜி வருண் குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளாா்.