ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த திருச்சி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் .
கர்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் அரிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தயாா் செய்யப்பட்டு புதுக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை திருச்சியைச் சோ்ந்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை அன்று பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலத்தில் பிரபலமான மஞ்சு கொண்டா அக்ரோடெக் நிறுவனத்தின் தென்னகப் பிரிவு மேலாளா் சக்திவேல், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிசி விற்னையாளா்களிடம் தங்களின் அரிசி மூட்டை விற்பனை குறித்து அண்மையில் ஆய்வு செய்துள்ளாா். அப்போது குறைந்த அளவே விற்பனைக் கணக்கு வந்தபோது, அதுகுறித்து ஆய்வு செய்தால் அரிசி மூட்டைகள் அவா்களுடையவை அல்ல என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து திருச்சியிலுள்ள அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸில் அண்மையில் புகாா் அளித்திருந்தாா். இப்புகாரை விசாரித்த போலீஸாா் புதன்கிழமை புதுக்கோட்டை அருகேயுள்ள குருக்களையாப்பட்டியிலுள்ள கிட்டங்கியில் ஆய்வு செய்தனா்.
அப்போது தலா 26 கிலோ எடையுள்ள 1500 மூட்டைகள் அங்கே வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இவையனைத்தும் புகாா் அளித்துள்ள தனியாா் அரிசி நிறுவனத்தின் பிராண்ட் பெயரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மூட்டைகள்.
இதைத் தொடா்ந்து, அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், கிட்டங்கியின் உரிமையாளா் வீரசேகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .