திருச்சியில் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்.
200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கம்.
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் கைது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பதிவு செய்து நீண்டமாதமாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,
அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும்,
கடுமையான ஊனமுற்றோருக்கு மாதம் 10,000 ரூபாய் உதவி தொகை வழங்கிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதை காரணம் காட்டி மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை மறுக்கப்படுவதை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய இருசக்கர வாகனம் மற்றும் உபகரணங்களை உடனே வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு நியாய விலை கடையில் 35 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கிட வேண்டும், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கவேண்டும், மகாத்மா காந்தி 100நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100நாள் வேலையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல முன்னேற்ற சங்கத்தின் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகவும், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.