Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கரூர்:காதலித்த பெண்ணுக்கு திருமணமானதால் அவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் வந்த காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது.

0

'- Advertisement -

கரூரில் முன்னாள் காதலியை கொலை செய்ய கூலிப்படையினருடன் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த முன்னாள் காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 24) என்பவரும் சமூக வலைதளமான முகநூல் மூலம் பழகி வந்துள்ளனர்.

அவர்கள் இருவருக்குமிடையே காதல் வளர்ந்த நிலையில், கடந்த இரு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்; இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவசங்கரின் பழக்கவழக்கம் பிடிக்காததால் அந்த இளம் பெண் அவரிடம் இருந்து விலகிச் சென்றுள்ளார்.

இதனிடையே, கரூர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அஜித் (வயது 22) என்ற இளைஞரை காதலித்து வந்த அந்த பெண்மணி, கடந்த 13-ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்த சிவசங்கர், தனக்கு கிடைக்காத பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில், அந்த பெண்ணை கொல்ல சதித் திட்டம் தீட்டி உள்ளார்.

மேலும், அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு தங்கியுள்ளார்.

அவருடன், கூலிப்படையைச் சேர்ந்த மதுரை மாவட்டம், செல்லூர் பகுதி ஆனந்த் (38) மற்றும் திண்டுக்கல் மாவட்டம், நாராயணன் பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20) ஆகிய இருவரும் உடனிருந்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்த பசுபதிபாளையம் தனிப்பிரிவு காவலர் ராமலிங்கம் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக, அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சிவசங்கர் மற்றும் ஆனந்த், ஹரிஹரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

ஒரு தலைப்பட்சமாக காதலித்த இளம்பெண்ணை கொலை செய்வதற்காக, கூலிப்படையினருடன் ஆயுதங்களுடன் தங்கியிருந்து சதித்திட்டம் தீட்டிய3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.