Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஈரோடு இடைதேர்தலில் மனுதாக்கல் எதிரொலி அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்.

0

'- Advertisement -

ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
10 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இடையில் பொங்கல் விடுமுறை வந்ததால் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடிந்தது. இறுதி நாள் அன்று ஏராளமானோர் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திமுக வேட்பாளர் விசி.சந்திரகுமார் வேட்பு மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதிமுக பிரமுகரான செந்தில் முருகன், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. மொத்தமாக 55 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
திமுக – நாதக இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த வாக்காளர்கள், தேர்தலை புறக்கணிப்பார்களா? தங்கள் கட்சியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் இந்த செந்தில் முருகன்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவைத் தொடர்ந்து கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன். லண்டனில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றி வந்த இவர், கடந்த கொரோனா பரவல் காலகட்டத்தில் வீட்டில் இருந்தே பணி செய்யும் (Work From Home) முறையில் ஈரோட்டிலுள்ள அவரது வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும்,

அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்தார். சென்னையில் செந்தில் முருகனின் புகைப்படத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து பத்திரிகையாளர்களுக்கு கொடுத்து, இவர்தான் எங்கள் வேட்பாளர்’ என்றார் ஓபிஎஸ்.

கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத செந்தில் முருகனுக்கு ஓ.பன்னீர்செல்வம் சீட் கொடுத்தது, அவரது அணியினர் கூட எதிர்பாராதது.

இதையடுத்து, செந்தில் முருகனுக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் பதவியையும் அவசர அவசரமாக வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.

பின்னர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஓபிஎஸ் தரப்பினரை சந்தித்து, அதிமுக போட்டியிட வழிவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, தனது அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவார் என்று அறிவித்தார் ஓபிஎஸ்.

தற்போது செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த முறை ஓபிஎஸ்ஸால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட செந்தில் முருகன், இந்த முறை எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தாலும் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் நீக்கப்பட்டுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று அதிமுகவில் இணைந்தார்.

தற்போது, அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், செந்தில் முருகன் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.