Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய பூசாரி கைது . ஒருவருக்கு வலை.

0

'- Advertisement -

நாகர்கோவிலில் சூப் கடைக்காரருக்கு மது ஊற்றிக்கொடுத்து அவரை போதையில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க செய்து வீடியோ எடுத்த அர்ச்சகரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தட்டான்விளை பகுதியை சேர்ந்த 42 வயது நபர் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் ராமன்புதூர் சந்திப்பில் சூப் கடை நடத்தி வருகிறேன். நானும், நாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு பகுதியை சேர்ந்த அர்ச்சகரான ஈசான சிவம் என்ற ராஜா (வயது 34) என்பவரும் கடந்த 5 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தோம். ஈசான சிவம், கோயில்களில் கும்பாபிஷேகம், பூஜைகள் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். அவர் ஒருநாள் திடீரென என்னிடம் கும்பாபிஷேகம் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொடங்க இருக்கிறேன். எனவே ரூ.10 லட்சம் தருவாயா? என கேட்டார். ஆனால் நான் பணம் தர மறுத்துவிட்டேன்.

இதனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அவர் என்னிடம் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென ஈசான சிவத்தின் நண்பர் என கூறி, தாழக்குடியை சேர்ந்த கோலப்பன் (வயது 53) என்பவர் என்னை தொடர்பு கொண்டார். ஈசான சிவம், உங்களிடம் பேச வேண்டும் என கூறி கோட்டாரில் உள்ள ஒரு வீட்டுக்கு என்னை அழைத்தார். நான், அந்த வீட்டுக்கு சென்றபோது அங்கு, ஈசான சிவம் இல்லை. கோலப்பன் மட்டும் தான் இருந்தார். ஈசான சிவம் காரில் வந்து கொண்டு இருப்பதாக கூறினார்.

இதையடுத்து கோலப்பன் எனக்கு மது ஊற்றி கொடுத்தார். நான் அளவுக்கு அதிகமாக குடித்ததால், போதை தலைக்கு ஏறியது. அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ஈசான சிவம், கோலப்பன் ஆகியோர் எனது சூப் கடைக்கு காரில் வந்தனர். ஈசான சிவம் என்னிடம், நீ கோட்டாரில் உள்ள வீட்டுக்கு வந்த போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்தாய். நீ உல்லாசமாக இருக்கும் போது, கோலப்பன் மூலம் வீடியோ கால் செய்ய வைத்து அதை ஸ்கீரின் ரிக்கார்டு செய்து வைத்துள்ளேன்.

நான் கேட்ட ரூ.10 லட்சத்தை தராவிட்டால், இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டினார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அன்றைய நாளில் எனக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து, இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வைத்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. நான் அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததால், தற்போது இந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். எனவே இதற்கு காரணமாக உள்ள ஈசான சிவம் மற்றும் கோலப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோ மேலும் பரவாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி விசாரணை நடத்தினார். இதனடிப்படையில், ஈசான சிவம் மற்றும் கோலப்பன் ஆகியோர் மீது ஆபாச வீடியோ பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் ஈசான சிவம் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது நண்பர் கோலப்பனை போலீசார் தேடி வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.