108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் . இக்கோயிலில் வருடம் தோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திரண்டு வருவார்கள்.
இவ்வாறு சிறப்புமிக்க ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளாக திரண்டிருந்து ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதுமே பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
ஸ்ரீரங்கநாதரின் அருளாசி பெற வந்திருக்கும் பக்தர்களால், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி வரையில் முழுக்கவே திருவிழா கோலமாக தான் இருக்கிறது.
திருச்சி பூலோக வைகுண்டம் என பேறு பெற்ற ஸ்ரீரங்கத்தில் தினமும் திருவிழா தான். அந்த வகையில் இன்று சொர்க்க வாசல் திறப்பையொட்டி களைக்கட்டி இருக்கிறது.
விஜயநகர பேரரசர் ஆட்சி செய்த காலத்தில் தை பிரம்மோற்ஸவ காலத்தில் மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் பிரம்மோற்சவமும் எப்படி கொண்டாடுவது என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை கார்த்திகையில் மாற்றியமைத்து வழிஏற்படுத்தி கொடுத்தார்.
இன்று ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் இன்று ஜனவரி 10ம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மற்றும் வெளியூரை சேர்ந்த 2,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உள்ளூர் மக்களும் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் கலந்து கொள்ள வசதியாகவும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.