மதுபோதைக்கு அடிமையாவது போன்று லாட்டரி சீட்டுக்கும் பலரும் அடிமையானதால், தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் அழிவின் பாதைக்கு சென்றன.
இதை தடுக்கும் விதமாக கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது.
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவதற்கும் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் சட்ட விரோதமாக ‘ஒரு நம்பர்’ லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு நம்பர் லாட்டரி சீட்டு என்பது நேரடியாக லாட்டரியை வாங்கி விற்பதற்குப் பதில், ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டமாக உருவெடுத்துள்ளது.
கேரளாவில் பரிசு விழும் லாட்டரியில் கடைசி மூன்று இலக்க எண்களை, ஏ, பி மற்றும் சி சீரிஸ் என தரகர்கள் குறிப்பிடுகின்றனர். இதில், ஏதேனும் ஒரு நம்பரை சூதாட்ட பேர்வழிகளில் லாக் செய்வார்கள். பரிசு விழும் லாட்டரியில் அந்த எண் இருந்தால் ஆயிரம் ரூபாய் முதல் கல்லா கட்டலாம் என கூறப்படுகிறது.

இதேபோன்று, மதுரையில் ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்து வந்தது தொடர்பாக பி.பி.குளத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரை, தல்லாகுளம் போலீசார் பிடித்து விசாரித்து உள்ளனர் .
விசாரணையில், மதுரையைச் சேர்ந்த ரஹமத்துல்லா, கனி ஆகிய இருவர், பாலாஜியின் வாட்ஸ் ஆப்பிற்கு கேரளா லாட்டரி எண்களை அனுப்பியது தெரியவந்தது.
அதை, தனது கூட்டாளிகள் மதுரை வீரன் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு அனுப்பி பாலாஜி பணம் பார்த்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. இதை தொடர்ந்து சட்ட விரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலாஜி, கனி மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
இதில், பிரகாஷ் என்பவர் மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். காவலர் பிரகாஷ் மீது ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிளப் மற்றும் விடுதிகளில் நடந்த சூதாட்டங்களில் மாமூல் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு முன்னர் தான் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. துறை ரீதியான நடவடிக்கைக்கு பின்னரும், தற்போது தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்.
‘ஒரு நம்பர்’ லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக சிறப்பு காவலர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.