தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த பிரபு என்ற என்ஜினியர் உள்பட ஐந்து பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.72 லட்சம் மோசடியில் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கரூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். போலியான பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த 27 வயதாகும் பிரபு என்ற என்ஜினியர், கடந்த ஆண்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் என்ஜினியர் பிரபு கூறியிருப்பதாவது :-
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த பிரவுவாகிய நான், அரசு வேலையில் சேருவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வந்தேன். மேலக்கூடலூரை சேர்ந்த அனுமந்தன் மகன் சந்திரசேகரன் தமிழ்நாடு மின் வாரியத்தில் வயர் மேன் ஆக வேலை செய்து வருகிறார். அவர் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் குமார், கோவை நடுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மனைவி உஷாராணி, காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் அண்ணா நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கவுரிசங்கர் ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் தங்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களை தெரியும் என்றும், அவர்கள் மூலம் நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் கூறினார்கள்.
அவர்களை தேனி மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த கார்த்திகேயன், பிரதீப்குமார், தினேஷ் குமார், ஆனந்த் ஆகியோருக்கும் சந்திரசேகரன் அறிமுகம் செய்து வைத்தார்கள். எனக்கு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார்கள். அதை நம்பி, குமாரின் மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.13 லட்சமும், கவுரிசங்கரிடம் ரொக்கமாக ரூ.6 லட்சத்து 75 ஆயிரமும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் நான் கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு ஒரு பணி நியமன உத்தரவு கொடுத்தார்கள். ஆனால் அது போலியான உத்தரவு என்று எனக்கு தெரியவந்தது.
என்னைப் போல், கார்த்திகேயனிடம் ரூ.16 லட்சத்து 75 ஆயிரம், பிரதீப்குமாரிடம் ரூ.12 லட்சத்து 75 ஆயிரமும், தினேஷ்குமாரிடம் ரூ.11 லட்சமும், ஆனந்திடம் ரூ.12 லட்சமும் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்திருக்கிறாரக்ள். இதில் எங்கள் 5 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.72 லட்சத்து 25 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில், குமார், பூமகள் (46), உஷாராணி, கவுரிசங்கர், சந்திரசேகரன் ஆகிய 5 பேர் மீதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பூமகளை, இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரை கரூரில் இருந்து தேனிக்கு அழைத்து வந்த போலீசார், அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
மற்ற 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.