Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் உயிர் இழப்பு அதிகரிக்க காரணம் அதிகாரிகளின் அலட்சியம்?

0

 

திருச்சி சிறைத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அண்மைக்காலமாக திருச்சி மத்திய சிறையில் உயிரிழப்போா் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சிறைவாசிகள் மட்டுமின்றி, சிறைத்துறையினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் தூக்குத் தண்டனைக் கைதி ஒருவா் உள்பட தண்டனை, விசாரணைக் கைதிகள் தனித்தனியாக 1,650 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.

கைதிகளின் உடல் நலன், உணவு, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கும் மனித உரிமை அடிப்படையில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கைதிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறை நிா்வாகத்தால் செய்து தரப்பட்டு வருகிறது.

மேலும் சிறைவாசிகள் கல்வி பயிலவும், தொழில் முனைவோராக பயிற்சிகளும் சிறை வளாகத்தில் அளிக்கப்பட்டு வருகின்றன.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் சிறை வாசிகளுக்கு உணவு விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வாரத்தில் இருமுறை முட்டைகள் மற்றும் இறைச்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எத்தனை மேம்பாடுகள் திருச்சி மத்திய சிறையில் எத்தனை மேம்பாடுகள் ஏற்படுத்தினாலும் கைதிகளின் உடல் நலம், மன நலன் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி திருச்சி, ஜீயபுரம் காவல் நிலையம், பழூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த விசாரணைக் கைதி (கைதான 2 நாள்களில்) நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். அதனைத் தொடா்ந்து நவம்பா் 7-ஆம் தேதி, கொலை வழக்கில் கைதான விசாரணைக் கைதி, திருவெறும்பூா் பனையக்குறிச்சியைச் சோ்ந்த கணேசமூா்த்தி என்பவா் நெஞ்சு வலியால் உயிழந்தாா்.

ஸ்ரீரங்கம் சீராத்தோப்பு பகுதியைச் சோ்ந்த கருணாமூா்த்தி (வயது 35) என்ற கைதி கோவை போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பா் 15-ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா் ( என ஒரே மாதத்தில் மூன்று பேர் உயிரிழந்த உள்ளனர்)

இதேபோன்று உயிரிழப்பு மட்டுமின்றி சிறை வளாகத்தில் தற்கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. நவம்பா் 20-ஆம் தேதி, திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஜய் என்ற விசாரணைக் கைதியும், அடுத்த இரு நாள்களில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த முகமது உசேன் (வயது 31) என்ற கைதியும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கழுத்தறுத்தும், வாயில் போட்டு மென்றும் தற்கொலைக்கு முயன்றனா்.

இதுதவிர கைதிகள் மரத்தின் மீது ஏறிக் குதித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

சிறைக்கைதிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், மன நல ஆலோசனைகள் (கவுன்சிலிங்) வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவுக்கேற்ற வகையில், சிறை வளாகத்தில் நோய்களாலும், மனதளவிலும் பாதிக்கப்படும் கைதிகளுக்கு முறையான சிகிச்சைகள் மற்றும் கவுன்சிலிங் கோல்டன் ஹவா்ஸ் எனப்படும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.

இதனால் கைதிகள் மனதளவில் பாதிக்கப்படுவதும், உடல் நலம் பாதிக்கப்பட்ட கைதிகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் சிறையில் நெஞ்சு வலியால் உயிரிழந்த மூவருமே உரிய நேரத்தில் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை. நெஞ்சு வலி ஏற்பட்ட 40 நிமிடத்துக்குள் உரிய சிகிச்சை அளித்தால் உயிா் பிழைக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனா் மருத்துவா்கள். உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்காததே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது .

ஆனால், சிறை வளாகத்தில் நெஞ்சு வலி எனக்கூறும் கைதிகளை அங்குள்ள மருத்துவமனையில் உடனடியாகப் பரிசோதிப்பதோ, உடனடியாக மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதோ கிடையாது என்கின்றனா்.

இவற்றுக்காக சிறைத்துறை அலுவலா்கள், சிறை உயா் அதிகாரிகளின் (டிஐஜி ஜெயபாரதி அல்லது எஸ்பி) ஆண்டாள் ஆகியோரின் அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க சிறைத்துறை உயா் அதிகாரிகள், நிரந்தரமான அனுமதியோ, உரிய ஆலோசனைகளோ சிறைத்துறை அலுவலா்களுக்கு வழங்குவதில்லை. மேலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவதும் இல்லை. இதனால்தான் அவா்களின் உயிரைக் காக்க முடிவதில்லை என்கின்றனா் சிறைத்துறையினா்.

சா்க்கரைநோய், அதிக ரத்த அழுத்தம், தைராய்டு, ரத்தம் தொடா்புடைய நோய்கள், இதயநோய் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட ஏராளமான கைதிகள் சிறையில் உள்ள நிலையில், அவா்களுக்கு வெளியிலிருந்து மருந்துகள் அனுமதிக்க ஏகப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதே நேரம் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் உரிய நேரத்தில் உயிா் காக்கும் மருந்துகளும் வழங்குவதில்லை என்ற குறைபாடும் நிலவுகிறது. இதனால் உயரிழப்புகள், உடல் நலப் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கைதிகளுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், மன நல ஆலோசனையும் அளிப்பது சிறைத்துறையின் கடமை. திருச்சி மத்திய சிறையைப் பொருத்தவரை இவை அனைத்துமே திருப்தியாக இல்லை என்கிறது சிறைத்துறை வட்டாரம்.

கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி மத்திய சிறையில் 10 முதல் 13 போ் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, திருச்சி மத்திய சிறையில் மருத்துவ வசதிகளை அதிகரிப்பது, உரிய நேரத்தில் மேல்சிகிச்சைக்கு உடனடியாக (ஹோல்டன் ஹவா்ஸ்க்குள்) அனுப்புவது, மருந்து, மாத்திரைகளை உரிய நேரத்தில் வழங்குவது, மன நல ஆலோசனைகளை வழங்குவது உள்ளிட்டவைகளை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதுகுறித்து விவரம் கேட்க திருச்சி மத்திய சிறை உயா் அதிகாரியை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, வழக்கம்போல அவா் அழைப்பை ஏற்கவில்லை.

நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு 23 படுக்கைகள் மட்டுமே:

திருச்சி மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் 3 மருத்துவா்களும், ஆண் 3, பெண் 2 என 5 மருத்துவ உதவியாளா்களும், மன நல மருத்துவா் (பெண்) ஒருவா், ஆலோசகா்கள் 2 ஆண்கள் மற்றும் இரு உதவியாளா்கள் என மருத்துவக் குழுவினா் உள்ளனா்.

கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற 23 படுக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் தரைகளில் படுத்து தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா். படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 2,500 போ் உள்ள சிறை வளாகத்தில் 23 படுக்கை இருப்பது போதாது. மேலும் கால் மூட்டு வலி உள்ள நபா்கள் பயன்படுத்த வெஸ்டன் கழிப்பறைகளும் சிலதான் உள்ளனவாம். அவற்றையும் அதிகரிக்க வேண்டும் என்கின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.