விபச்சார வழக்கில் சிக்கிய நபருக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் பொறுப்பா?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட செயலாளராக இருக்கும் செந்தில் ஏற்கனவே பாலியல் தொழில் வழக்கில் கைதானவர் என்பதும், அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ட்விட்டரில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக செந்தில் தரப்பை தொடர்பு கொண்ட போது அவர்கள் இதனை மறுத்துள்ளனர்.
தவெக மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
தற்போது மாநாட்டுக்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகளோடு, அன்னதானம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் தவெக நிர்வாகிகள் கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தினர். அதில் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் என்பவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தவெக மாநாட்டுக்கு 40000 பேரை திரட்டி வர ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் தற்போது அதனை வைத்தே விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது திருச்சி மத்திய மாவட்ட தலைவர் எனக் கூறப்படும் செந்தில், ஏற்கனவே விஜய் மக்கள் நிர்வாகியாக இருந்த போது பாலியல் தொழில் செய்த வழக்கில் சிக்கி கைதானவர் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட போலீசார் ‘ஷைன் ஸ்பா’ என்ற பெயரில் மசாஜ் சென்டர் உரிமம் பெறாமல் நடத்தி வந்ததும், அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பாக ஸ்பாவின் மேலாளரான லட்சுமி தேவியை கைது செய்த போலீசார் ஸ்பாவின் உரிமையாளரான திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். செந்தில் தலைமறைவான நிலையில், தொடர்ந்து அவர் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செந்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர் திருச்சி மத்திய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் தொழில் வழக்கு, பிளாக்கில் டிக்கெட் விற்றது, இன்னும் ஒரு சில வழக்குகள் இருக்கும் ஒருவர் கட்சியின் மாவட்ட தலைமை பொறுப்பை பெற்றது எப்படி என கட்சிக்குள்ளேயும் வெளியேயும் விமர்சனங்கள் எழுந்து உள்ளது.
பாலியல் தொழில் வழக்கில், செந்தில் ஜாமினில் தான் வெளிவந்திருக்கிறார் எனவும் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் பாலியல் தொழில் குற்றச்சாட்டில் சிக்கியவர் எப்படி மாவட்ட பொறுப்பில் நியமிக்கப்படலாம் என கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக செந்தில் தரப்பை தொடர்பு கொண்டு பேசியபோது,” செந்தில் மீது வழக்கு இருப்பது உண்மைதான். ஆனால் தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கிறார். செந்தில் தான் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இன்னும் மாவட்ட தலைவர், செயலாளர் என யாரையுமே நியமிக்கவில்லை .ஏற்கனவே இருந்த பொறுப்பை வைத்து சிலர் மாவட்ட தலைவர் என செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருக்கு பொறுப்பு கொடுத்தால் தலைமை கேட்காதா? எனவே செந்தில் ஒரு சாதாரண தொண்டராகவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் மாவட்ட தலைவர் என ஊடகங்கள் தான் செய்திகளை வெளியிட்டு விஷயத்தை பெரிது படுத்தி இருக்கின்றன” என விளக்கம் அளித்தனர்.