திருச்சி வயலூா் சாலை, உய்யக்கொண்டான் திருமலை அருகே எம் எம் நகா் கரைப் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் இளைஞா் ஒருவா், நேற்று எரிந்த நிலையில் இறந்து கிடப்பதாக திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் உய்யக்கொண்டான் திருமலை தெற்கு பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் என்பதும், திருச்சி கடைவீதியில் உள்ள துணிக் கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனா்.
இவா் தற்கொலை செய்து கொண்டாரா?, கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இருப்பினும், சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.