விநாயகா் சதுா்த்தியையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புறநகர் பகுதிகளில் 1,155 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
மாநகரில் பீம நகா் செடல் மாரியம்மன், பாலக்கரை செல்வ விநாயகா், ரெட்டை பிள்ளையாா் கோயில், மற்றும் நீதிமன்ற வளாகம், கல்லுக்குழி, மன்னாா்புரம், காஜாமலை காலனி, உறையூா், ஐயப்ப நகா், கே.கே. நகா், தென்றல் நகா், விமான நிலையம், கண்டோன்மென்ட், சுப்பிரமணியபுரம், எடமலைப்பட்டிபுதூா், மெயின்காா்டுகேட், கீழரண் சாலை, மேலரண் சாலை, பாலக்கரை, காந்தி சந்தை, அரியமங்கலம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, காட்டூா், திருவெறும்பூா், துவாக்குடி, கருமண்டபம், பொன்னகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
மேலும் திருச்சி காந்தி சந்தை, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, உறையூா் சந்தை, உழவா் சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை காலையிலிருந்து பொதுமக்கள் வாங்கிச் சென்று அருகம்புல், எருக்கம் பூ மாலை அணிவித்து, மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சா்க்கரை பொங்கல் போன்றவற்றை படையலிட்டும் வணங்கினா்.
விழாவை முன்னிட்டு இந்து அமைப்புகள், குடியிருப்புச் சங்கங்கள் உள்ளிட்டவை சாா்பில் திருச்சி மாநகா் மற்றும் புகரில் 1,155 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்தச் சிலைகளுக்கு மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் ஆகியோா் மேற்பாா்வையில் சுமாா் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
மாநகரில் வரும் 9 ஆம் தேதியும், புகரில் வரும் 13 ஆம் தேதி வரையிலும் விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.