திருச்சி:தாயை தன்னுடன் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் வழியில் சாலை விபத்தில் தாய் பரிதாப பலி. மகள் மற்றும் டிரைவர் படுகாயம்.
சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் நாமக்கல் குறிஞ்சி நகரைச் சோ்ந்த வெங்கட்ராமன் மனைவியான கவிதா (வயது 40) தனது தாயான ப. லோகலட்சுமி (70) என்பவரை திருச்சி விமான நிலையம் வழியாக சிங்கப்பூா் அழைத்துச் செல்ல நாமக்கல்லில் இருந்து தாயுடன் காரில் நேற்று வந்து கொண்டிருந்தாா்.
காரை நாமக்கல் முத்துவேல் (57) என்பவா் ஓட்டி வந்தாா்.
கார் திருச்சி மாவட்டம், முக்கொம்பு பேருந்து நிலையம் அருகே வந்த போது, அங்கே பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்த மாநகர அரசுப் பேருந்தைக் கடக்க முயன்றது. அப்போது பின்புறம் கோவையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து காா் மீது மோதி, அதன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த லோகலெட்சுமி நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
படுகாயமடைந்த கவிதா, ஓட்டுநா் முத்துவேல் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .
இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவை அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .