திருச்சி மண்ணச்சநல்லுாா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை மேலாளராக பணியாற்றி வந்தவா் கோகிலா (வயது 43). அதே வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பாா்த்து வந்தவா் இம்மானுவேல் லுாா்து. இவா் அலுவலக நடைமுறைகளை சரிவர கடைப்பிடிக்காமல் ஒழுங்கீனமாக நடந்ததாக புகாா் எழுந்தது. இதை அவ்வப்போது கோகிலா கண்டித்ததால் அவா் மீது லுாா்து ஆத்திரத்தில் இருந்துள்ளாா். இதன் காரணமாக 28.6.2018 அன்று கோகிலா குடிக்க வைத்திருந்த தண்ணீரில் நைட்ரிக் திரவத்தை (ஆசிட்) கலந்து வைத்துள்ளாா். இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லுாரின் அப்போதைய காவல் ஆய்வாளா் இம்மானுவேல் ராயப்பன் வழக்குப் பதிவு செய்தாா்.
இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் (சிஜேஎம்) நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கில் விசாரணை அதிகாரியான இம்மானுவேல் ராயப்பன் சாட்சியம் அளிக்க வேண்டியிருந்ததால் அவருக்கு நீதிமன்றம் தரப்பில் இருந்து பலமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. ஆனால், இம்மானுவேல் ராயப்பன் அழைப்பாணையை பெறாமலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்காமலும் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கம்போல் இம்மானுவேல் ராயப்பன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டாா்.