பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் திருச்சி சூர்யா. இந்நிலையில் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி எஸ் சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘இனியும் பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பாக்ஸ் தள பதிவில்; அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன்,
அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.