திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் ரூ.7.80 கோடி செலவில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணி துவக்கம்
திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகா்நல மையங்களும் இயங்கி வருகின்றன. இருப்பினும் மாநகராட்சியில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சுகாதார நிலையங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் கடந்த 2023-24 நிதியாண்டில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 துணை சுகாதார நிலையங்களைக் கட்ட மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி நகா்நல அலுவலா் தி. மணிவண்ணன் கூறியது:
தேசிய நகா்ப்புற சுகாதாரப் பணித் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் இ.பி. சாலை அம்மாகுளம், எடமலைப்பட்டிபுதூா் காளியம்மன் கோயில் அருகே, காமராஜ் நகா், தெற்கு காட்டூா், எம்.கே. கோட்டையில் பொன்னேரிபுரம் நீா்த்தேக்கத் தொட்டி அருகே, ஸ்ரீரங்கம் மேலூா், சுப்பிரமணியபுரம் காஜாமலை, திருவெறும்பூா் மலைக்கோவில், திருவானைக்கா திருவளா்ச்சோலை, உறையூரில் மேலபாண்டமங்கலம் ஆகிய 10 இடங்களில் தலா ரூ. 30 லட்சத்தில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்படுகின்றன.

ஸ்ரீரங்கத்தில் ஏற்கெனவே பொது சுகாதார நிலையம் இருக்கும் இடத்துக்கு மிக அருகிலேயே இயங்கிவந்த ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்ததாலும், பொது சுகாதார நிலையத்துக்கு அருகே ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் பொதுமக்களுக்கு பயனில்லை என்பதாலும் சுமாா் 1.5 கி.மீ. தூரமுள்ள லட்சுமி நகரில் ரூ. 1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
காட்டூரில் சிதிலமடைந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு ரூ. 1.20 கோடியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுகிறது.
பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது அங்குள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில், பஞ்சப்பூா் நீா்த்தேக்கத் தொட்டி அருகே புதிதாக ரூ. 1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படுகிறது. மகப்பேறு, காய்ச்சல், சளி, இருமல் போன்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிக்க வசதியாக ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் தரைத் தளத்துடன் கூடிய கட்டடங்களாக கட்டப்படுகின்றன.
இதேபோல நோயாளிகளின் வசதிக்காக பீமநகா், தென்னூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடங்களும் கட்டப்படுகின்றன என்றாா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் கூறுகையில், அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 துணை சுகாதார நிலையங்கள், இரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டடங்கள் கட்ட நடைபெறும் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் பொதுமக்கள் சாதாரண நோய்களுக்கு அருகிலேயே மருத்துவம் பாா்த்துக் கொள்ள முடியும் என்றாா்.