Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பக்ரீத் அன்று மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்ட தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் திருச்சியை சேர்ந்தவர் வழக்கு.

0

 

பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருச்சி மாநகரில் ஆடு பலியிடுவதற்கு மாநகராட்சி சார்பாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியும் மீறி சட்ட விரோதமாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் ஒவ்வொரு தெருக்கள் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லூரி இடங்களில் இது போன்று பலியிட்டு வருகின்றனர்.

கால்நடைகள் பலியிடுவது குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளையும், வழிமுறைகளையும் வகுத்துள்ளது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவதில்லை. இதனால் கால்நடைகள் அதிக அளவில் சட்டவிரோதமாக பலியிடப்பட்டு வருகின்றன. எனவே பக்ரீத் பண்டிகையின் போது மாநகராட்சிஅனுமதி இல்லாத இடங்களில் ஆடு, மாடுகளை அறுத்து பலியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையின் போது மனுதாரர் வழக்கறிஞர், ஆடு, மாடுகளை இஸ்லாமியர் சட்டவிரோதமாக மாநகராட்சி அனுமதி இல்லாத இடங்களிலும் அறுத்து பலியிட்டு வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். திருச்சி மாநகராட்சியில் ஆடு, மாடுகளை அறுப்பதற்காக 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகளை பலியிடுவதை இரண்டு வகையாக பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று வழக்கமான நாட்களில் ஆடு, மாடுகளை அறுப்பதை மாநகராட்சி கண்காணித்து வருகிறது. விதிமுறைகளை மீறி பழியிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது மத ரீதியான சடங்குகள் இதில் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது. இதனை இந்திய அரசியலமைப்புச் சட்டமும் உறுதிப்படுத்தியள்ளது

மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இதனை தெளிவாக உள்ளது. எனவே, மனுதாரர் கூறும் நிவாரணத்தை அரசால் வழங்க முடியாது. என வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகளை மீறி ஆடு, மாடுகள் பலியிடுவதாக புகார் வந்தால் அதன் அடிப்படையில் மாநில அரசுக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் பக்ரீத் பண்டிகையின் போது தமிழக முழுவதும் இது போன்று மாநகராட்சி அனுமதிக்காத பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டி பலியிடுவதை தடை செய்ய கோரியுள்ளார். ஆனால், பக்ரீத் பண்டிகை வரும் 17-ம் தேதி இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட உள்ள சூழலில் இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

மேலும் இந்த வழக்கில் ஆடு, மாடுகளை அறுத்து பலியிடுவர்களை வாதங்களை கேட்காமல் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. எனவே, மனுதாரர் இஸ்லாமிய சமூகத்தினரோ அல்லது ஆடு மாடுகளை அழித்து பலியிடும் சமூகத்தினரை எதிர்மனுதாரராக இணைத்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.