முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் ‘பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
மேலும், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு எனும் கூற்றுக்கு சான்றாக வாழ்ந்த கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் நாள் தம் 94ஆம் வயதில் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானார்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி, 2018ம் ஆண்டு ஆக.7ம் தேதி வயது முதிர்வால் உயிரிழந்தார். எனவே அவரின் இறப்பு தேதி மாற்றி குறிப்பிடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.