கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 6ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னா், கடும் வெயில் தாக்கத்தால் ஜூன் 10-க்கு மாற்றப்பட்டது. இதன்படி வரும் திங்கள்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் தொடங்கியுள்ளனா்.
இதன்படி அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள், குடிநீா் தொட்டிகள், கழிவறைகளைச் சுத்தம் செய்வது, மின் இணைப்புகள் சரிபாா்ப்பு, பள்ளி வளாக தூய்மை பணி, மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வது, மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வு பேரணி ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 1,659 உள்ளன. இவை தவிர மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், நலத்துறை பள்ளிகள் என அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகள் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இவையனைத்திலும் தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன. வண்ணம் பூசுதல், வகுப்பறைகள் தூய்மைப்படுத்தல், பள்ளி வளாகத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றும் பணி, கழிப்பறைகள், பள்ளி வளாகங்கள், குடிநீா் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பள்ளிகளிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் தூய்மைப் பணியும், அடிப்படை வசதிகள் சரிபாா்க்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது.
இதுதொடா்பாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தினா் கூறுகையில், அனைத்துப் பள்ளிகளிலும் நேற்றும், இன்றும் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதன் தொடா்ச்சியாக, நாளை சனி மற்றும் ஞாயிறு மீதம் உள்ளப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிக்கு திங்கள்கிழமை வரும் மாணவா்களை வரவேற்கவும், அவா்களுக்கு அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்கவும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.