Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாம் தமிழர் கட்சியின் மூலம் சொல்ல வேண்டிய செய்தி திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளிவர தொடங்கி விட்டார்கள் . சீமானை பாராட்டிய அண்ணாமலை.

0

தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றுள்ளது. ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். அதேபோல் நாம் தமிழர் கட்சி முதல்முறையாக 8.2 சதவிகித வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 14 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பின் வாக்கு சதவிகிதமும் 22 சதவிகிதமாக உள்ளது. தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர்களிடையே சில வார்த்தைகள் மோதல்கள் இருந்தன. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசும்போது, 2019ல் திமுக வாங்கிய வாக்குகளுக்கும், 2024ல் திமுக வாங்கிய வாக்குகளுக்கும் 6 சதவிகிதம் வித்தியாசம் உள்ளது. அந்த 6 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக பார்க்கிறோம். அதேபோல் நாம் தமிழர் கட்சியை பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால் அரசியல் சித்தாந்த ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தாலும், இந்த களத்தில் நேர்மையாக பணம் கொடுக்காமல் நின்றுள்ளார்கள். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். கூட்டணி இல்லாததோடு, புதிய சின்னத்தில் நின்று வாக்குகளை வென்றுள்ளார்கள்.

நாம் தமிழர் கட்சியின் மூலமாக ஒரு செய்தி சொல்ல வேண்டியுள்ளது. திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளியே வர தொடங்கியுள்ளனர் என்பது அந்த கட்சியின் செய்தி. அவர்கள் களத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை நானும் நேரில் பார்த்தேன். மக்களிடையே அவர்களும் தங்களின் சித்தாந்தத்தை முன் வைக்கிறார்கள். என்னையும் சீமான் அண்ணனையும் ஒப்பிட வேண்டாம்.

நாங்கள் அதிக வாக்குகள் வாங்கிவிட்டோம். சீமான் அண்ணன் நாம் தமிழர் கட்சியை கலைப்பாரா என்று கேட்க மாட்டேன். சீமான் அண்ணன் அவர்களின் பாதையில் பயணிக்கிறார். அரசியலில் நேர்மையாக நின்றதை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.