இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 356 பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. மேலும் 22 விதிகள் ரத்து செய்யப்பட்டும் 175 விதிகள் மாற்றப்பட்டும் உள்ளன. இவை தவிர புதிதாக 8 விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த சட்டப்பிரிவுகள் ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளன.
எனவே இந்தச் சட்ட விவரங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக காவல் துறையினருக்கு மாநிலம் முழுவதும் சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக காவல்துறை இயக்குநா் சங்கா்ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி வழிகாட்டுதலின்படி, திருச்சி மாநகரில் காவல் ஆணையரகம், கே.கே நகா் பகுதியில் 2 இடங்கள், கண்டோன்மெண்ட் காவல் நிலைய வளாகம் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
மே 27 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சி முகாம் தொடா்ந்து 5 நாள்களுக்கு காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நாளையுடன் இந்த முகாம் நிறைவு பெறுகிறது .
இதில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் கலந்து கொள்கின்றனா்.
இதற்கென திருச்சி நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்குரைஞா்கள் , மாற்றப்பட்ட சட்டங்கள் குறித்த பயிற்சி அளித்து வருகின்றனா்.