Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மக்களவை தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள். வேட்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்.

0

 

திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு
கோரிக்கை விடுத்த
திருச்சி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள்.

திருச்சி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்பு சார்பில்
திருச்சி மக்களவைத் தொகுதி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

கூட்டத்தில்,
தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி திருச்சி என்றாலே திருப்புமுனை தான் முக்கிய அரசியல் கட்சிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கமாகும்.
திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் திருவரங்கம், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரம்பூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி) புதுக்கோட்டை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

திருச்சி மக்களவைத் தொகுதியில் 15, 44,742 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 7,52,953 நபர்கள்
பெண் வாக்காளர்கள் 7,91,548 நபர்கள் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 241 நபர்கள் ஆவர்.
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாக இருந்தது, ஆரம்பகால சோழர்களின் கோட்டையாக இருந்தது, பின்னர் பல்லவர்களிடம் விழுந்தது. 1565 ஆம் ஆண்டில் இந்த பேரரசு வீழ்ச்சியுற்ற போது, மதுரை நாயக்கர்கள், மராட்டியர்கள், நவாப்கள், பிரெஞ்சு மற்றும் இறுதியாக பிரிட்டிஷ் ஆகியோர் திருச்சியை ஆக்கிரமித்தனர். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மேலாதிக்கத்திற்கான பிரிட்டிஷ்-பிரஞ்சு போராட்டத்தின் போது கர்நாடகத்தின் போர்களை எதிர்த்துப் போராடிய முக்கிய மையங்களில் இதுவும் ஒன்றாகும். மதுரை நாயக்கர்கள் கீழ் இருந்தத போது திருச்சி அதன் முழுமையான செழிப்புடன் வளர்ந்ததோடு இன்றும் அது செழித்தோங்கிய நகரமாக உள்ளது.
சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதியாக உள்ளது.
திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது,
திரு – சிராய் – பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்றாகும். முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் (1980–1984) ஆட்சி காலத்தில் அரசியல் தலைமையிடமாக திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அத்திட்டம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றளவும் திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக்க தகுதி உடைய நகரமாக மாற்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஓர் ஏக்கமாகவே காணமுடிகிறது.
மத வேற்றுமை இன்றி சகோதர, சகோதரிகளாக அன்பையும் அமைதியையும் பேணிப் பழகக் கூடிய தொகுதி தான் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி.
வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளது திருச்சி மக்களவைத் தொகுதியின் வரலாறு ஆகும். திருச்சி மக்களவைத் தொகுதியில் நெல், வாழை உள்ளிட்டவை பிரதான தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது இந்திய அளவில் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்தின அந்தஸ்து பெற்ற பாய்லர் ஆலை. துப்பாக்கி தொழிற்சாலை,பொன்மலை ரயில்வே பணிமனை உட்பட மத்திய அரசின் தொழிற்சாலைகளும் தனியார் நிறுவனங்களும் தொழிற்சாலைகளை சார்ந்த சிறுகுறு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அப்படி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க மேலும் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும்.

திருச்சிராப்பள்ளி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்தாலும் பல தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ளன.
பாய்லர் ஆலையைச் சார்ந்து உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வந்ததால் திருவரம்பூர், துவாக்குடி, அரியமங்கலம் போன்ற பகுதிகளில் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்றனர். பாய்லர் ஆலைக்கு ஆர்டர்கள் குறைந்ததால் அதை நம்பி இருந்த சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன அதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர், இதற்கு விரைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும்..

அரியமங்கலம் பழைய பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரை 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும் இன்றளவும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே உள்ளது அதற்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் அடிமனை பிரச்சனை தீர்ந்த பாடு இல்லை அந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டு தொழில்கள் எக்ஸ்பிரஸ் சாலை வேண்டும். திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி பெங்களூர் புதிய ரயில், பகல் நேரத்தில் திருச்சி சென்னை இடையே குறைந்த கட்டணத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்,
திருச்சி திருப்பதி புதிய ரயில், திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி ராமேஸ்வரம் திருச்சி கரூர் ஈரோடு தஞ்சாவூர் விழுப்புரம் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக மாற்றுதல், திருச்சி பொன்மலை பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் புதிய ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பல்வேறு அதிவிரைவு ரயில்கள் குளிர் சாதனப்பெட்டியுடன் அதிக கட்டணத்தில் இயங்கி வருகிறது சாதாரண நடுத்தர ஏழை எளிய மக்கள் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் சாதாரன பெட்டிகளுடன் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.

தற்போது இயக்கப்படும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறைந்த அளவே முன்பதிவில்லா பெட்டிகள் உள்ள நிலையில் அதை அதிகபடுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டையை பொருத்தவரை ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் .

விவசாயிகளிடம் முந்திரியை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். வெளிநாட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்.

திருச்சிராப்பள்ளி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்தை விரைந்து முடிக்க வேண்டும்.‌திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மத்திய பகுதி என்பதால் அதை சுற்றியுள்ள பல்வேறு மாவட்ட கிராம பகுதியை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற மத்திய அரசு சார்பில் அதிநவீன தொழிநுட்ப வசதியுடன் மருத்துவ சிகிச்சை பெற புதிய மருத்துவமனை அமைக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ள திருச்சி மக்களவைத் தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் மாணவ மாணவிகள் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. திருச்சியில் அவர்கள் வேலை செய்யும் வகையில் தொழில்துறை மற்றும் ஜடி காரிடார் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் கட்டமைப்புகளை உறுவாக்க வேண்டும்.

தேசிய நெடுஞ் சாலைகளிலுள்ள மதுபான கடைகள் முற்றிலும் அகற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் நிழல் தரும் மரங்களை வைத்து பராமரிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வளர்ச்சிக்கும் கட்டமைப்பு பணிக்கும் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து திருச்சியை இந்தியாவின் முன்மாதிரி மக்களவைத் தொகுதியாக ஆக்கிட வேண்டுமென திருச்சிராப்பள்ளி சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் வேட்பாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு நுகர்வோர் பெடரேஷன் தலைவர் சிவசங்கர சேகரன், நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் நல சங்க தலைவர் கோவிந்தராஜ், வானூர்தி வசதி குறித்த ஆய்வாளர் உபயதுல்லா, டைட்ஸ் செயற்குழு உறுப்பினர் ஜெகநாத், ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்க தலைவர் மோகன்ராம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாக்சீடு குடும்ப நல ஆலோசகர் சசி, இறகுகள் அமைப்பு நிறுவனர் ராபின், மாற்றம் அமைப்பு தலைவர் தாமஸ், அனைத்து இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு அமைப்பு பெண்கள் பிரிவு செயலர் கார்த்திகா, பெட்காட் திருச்சி செயலர் கார்த்திக் டேனியல், தாய் நேசம் அறக்கட்டளை ஹெப்சி சத்திய ராக்கினி, சமூக செயற்பாட்டாளர் கோவிந்தசாமி, ஆம்ஸ்ட்ராங் ராபி மற்றும் நுகர்வோர் ஆர்வலர் பாத்திமா கண்ணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.