மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- “திருச்சி என்றாலே தி.மு.க.தான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். இந்தியாவில் திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியில் ஒன்றிணைந்துள்ளோம்.
திமுக-வுக்கு 6 முறை ஆட்சி பொறுப்பை வழங்கியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இந்தியாவே பாராட்டும் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். தி.மு.க.,வினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்திலே பிரதமர் தமிழகம் வருகிறார்.
10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமர் மோடியால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியுமா? தமிழ்நாட்டிற்கான சிறப்புத்திட்டங்கள் எதையாவது பிரதமர் மோடி பட்டியலிட முடியுமா? பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயம் அவரது கண்களிலும் முகத்திலும் தெரிகிறது. பிரதமர் மோடியால் தான் செய்த சாதனைகளை சொல்ல முடியவில்லை. எங்களது மூன்று ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டத்தை சொல்ல ஒருநாள் போதாது. பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்தி இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.
மக்களின் பிரச்சினைகளை மறைக்கவே தேவையில்லாததை பேசி பிரதமர் திசை திருப்புகிறார். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்பதாக கூறி பா.ஜ.க. அரசு மக்களை ஏமாற்றியது. பா.ஜ.க. அரசின் தோல்விகளை மறைக்கவே தேவையில்லாத விஷயங்களை மோடி பேசுகிறார். பா.ஜ.க.,வின் தேர்தல் தோல்வி பயத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. பா.ஜ.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளின் முதல்வர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாஜக அரசின் ஊழல்கள் வெளியே வரும். நாற்பதுக்கு நாற்பதையும் நிச்சயம் வெல்வோம்” என்று அவர் தெரிவித்தார்.