Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு : ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் திருச்சி கலெக்டருக்கு மனு.

0

பாராளுமன்றத் தேர்தல் பணி, பயிற்சி வகுப்பு:

ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை .

தேர்தல் பணி மற்றும் பயிற்சி வகுப்பு தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப் குமாருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்டக் கிளை சார்பாக மாநில பொருளாளரும், மாவட்ட செயலாளருமான சே. நீலகண்டன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-

எதிர்வரும் ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பணியாற்ற இருக்கும் ஆசிரியர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கண்டுள்ள தேர்தல் ஆணையமானது ஆசிரியர்களுக்கு வழங்கும் தேர்தல் பணியை,குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு 100 கி.மீ. கடந்து பணி வழங்கி வருவது தேர்தல் பணியை சிறப்புடன் பணியாற்றுவதில் சிரமமாக உள்ளதாக பெண் ஆசிரியர்கள் கருதுகின்றனர். காரணம் வெப்கேமரா, நுண்பார்வையாளர்கள், 100 சத துல்லியமான வாக்காளர் பட்டியல், பறக்கும் படை, கட்சி முகவர்கள் உள்ளிட்ட பல கண்காணிப்பு சூழல் இருக்கும் போது ஆசிரியர்களை பல கிலோமீட்டர் தொலைவிற்கு அலைக்கழிப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு 50 கி.மீ.க்குள்ளாகவே தேர்தல் பணியை வழங்கி உதவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் ஆணையத்தின் அங்கம் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கையினை வைக்கின்றோம்.
தேர்தல் பயிற்சி வகுப்பானது 24.03.2024 அன்றும் ,16.04.2024 (செவ்வாய்க்கிழமை) அன்றும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 24.03.2024 (ஞாயிற்றுக்கிழமை)
கிறித்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுகின்றனர். அதே போல் 16.04.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. எனவே மேற்கண்ட தினங்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளை வேறொரு நாளில் நடத்த நடவடிக்கை எடுத்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் படி விலக்கு அளிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறன் உடைய ஆசிரியர்கள், தீராத நோய் உடையவர்கள்,அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், மருத்துவ விடுப்பில் உள்ளவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், விருப்ப ஓய்வு வழங்கியவர்கள் போன்றவர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும், வாக்குச் சாவடி நிலை அலுவலர் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் போதிய அடிப்படை வசதியையும் உரிய பாதுகாப்பையும் உறுதி செய்து தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக வாக்குச் சாவடி நிலை அலுவலர் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பிற்காக பெண் உதவிக் காவலர் ஒருவரை பணியில் அமர்த்த வேண்டுமாயும், பள்ளி வளாகத்திற்குள்ளாகவே அவர்களுக்கு இடம் அமைத்து தர வேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரே தொகுதிக்குள்ளாக தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணிபுரியும் வாக்குச் சாவடியிலேயே வாக்கினை செலுத்த ஏற்பாடு செய்யுமாறும், பிற ஆசிரியர்கள் அனைவருக்கும் 100 சத தபால் வாக்கினை செலுத்த ஏற்பாடு செய்து உதவும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து ஆசிரியர்கள் தேர்தல் பணியினை சிறப்புடன் செய்ய உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.