Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா ? 40 தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளிக்க அறிக்கை.

0

வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது.

இதற்காக அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட மறைமுக பேச்சுவார்த்தைகளும், இரண்டு கட்ட நேரடி பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுள்ள நிலையில் நான்கு தொகுதிகளை தேமுதிகவுக்கு வழங்க அதிமுக முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் ஐந்து மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கேட்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேமுதிக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் எதிர்வரும் 19 ம் தேதி காலை 11 மணியிலிருந்து விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும், விருப்பமனுக்களை பூர்த்தி செய்து திருப்பிச்செலுத்த 20 ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக பொதுத்தொகுதிக்கு 15,000 மும், தனித் தொகுதிக்கு ரூபாய் 10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்ப மனு அளித்தவர்களிடம் 21ம் தேதி புதன்கிழமையன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்றும் தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேமுதிக தமிழகத்தில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது .

Leave A Reply

Your email address will not be published.