Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இரட்டை இலை சின்னம் யாருக்கு. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது… முழு விபரம்

0

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) முடித்துவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்கள் தரப்பு எடப்பாடி பழனிசாமி மீது வழங்கிய புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

புகழேந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திக் வேணு ஆஜராகி, “அதிமுக பொதுக்குழு தொடர்பாக மனுதாரர் வழங்கிய புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி, “அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. இந்த நிலையில் கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் எதன் அடிப்படையில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய முடியும்? கடந்த 2022 ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதி மீறலும் இல்லை.

அதிமுக கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்சனையுமில்லை. வீணாக பிரச்சனை செய்ய வேண்டுமென்றே புகழேந்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகாரளிக்குமாறு புகழேந்தி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி சச்சின் தத்தா, அவரது மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை இன்று முடித்துவைத்தார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் இல்லையென்றால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.