Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வேட்பு மனு தாக்கல் முன்பே தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் . தேர்தல் ஆணையம் அறிவிப்பு .

0

தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் உள்ளிட்ட 27 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்தல்களில் வேட்பு மனு, ஓட்டுப்பதிவு, தேர்தல் முடிவுகள் வெளியிடும் நாள் உள்ளிட்ட தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும்.

மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பல்வேறு விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. வேட்பு மனு தாக்கல் முதல் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை வரை பல்வேறு விதிகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

அதன்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் கட்சி சார்ந்து அல்லது சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை முறைப்படி தாக்கல் செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி இதனை அனைத்து வேட்பாளர்களும் பின்பற்றுவது அவசியமாகும். இதற்காக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதாவது தேர்தல் செலவு தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யாத பட்சத்தில் அந்த வேட்பாளர்களுக்கு அதன் பிறகு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்

இந்நிலையில் தான் கடந்த 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தேர்தல் செலவு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்காமல் டிமிக்கி கொடுத்தனர்.

இந்நிலையில் தான் அந்த வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது தேர்தல் செலவு கணக்கை காட்டாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை அனுப்பி உள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார் உள்பட 27 பேரின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த 27 பேரும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது.

Leave A Reply

Your email address will not be published.